

கோவை: மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக கோவையில் நேற்று ரயில் மறியல் செய்ய முயன்ற 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
பாலியல் குற்றச்சாட்டு புகாரில் நடவடிக்கை கோரி, டெல்லியில் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்தும், பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கோவையில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக நேற்று ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்த 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸார் கைது செய்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.