Published : 06 Jun 2023 06:04 AM
Last Updated : 06 Jun 2023 06:04 AM
சென்னை: தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம் கருமாத்தூர் பகுதியில் கடந்த 1936-ம் ஆண்டு பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த எழுவன் மற்றும் பெரியகருப்பன் ஆகியோருக்கு சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான பஞ்சமி நிலங்கள் அரசால் அளிக்கப்பட்டன. ஆனால், அவர்களால் விவசாயம் செய்ய முடியாத காரணத்தால் 1969-ல் இந்நிலங்கள் வெள்ளைச்சாமி-மீனாட்சியம்மாள் தம்பதிக்கு விற்கப்பட்டது. பின்னர் அவர்கள், 1977-ல் ஒரு தனியாருக்கு நிலத்தை விற்றுள்ளனர்.
பஞ்சமி நிலங்களை இவ்வாறு சட்டத்துக்கு விரோதமான முறையில் தனியாருக்கு விற்பனைசெய்வது செல்லாததாகும்.
எனவே, இத்தகைய மோசடியான நில விற்பனையை அரசு முற்றாக ரத்து செய்து, இந்த பஞ்சமி நிலங்களை நிலமற்ற பட்டியலின் மக்களுக்கு விநியோகம் செய்ய முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ள 3 ஏக்கர் பஞ்சமி நிலங்களை வகை மாற்றம் செய்து, அப்பகுதியில் உள்ள நிலமற்ற ஏழை பட்டியலின மக்களுக்கு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பஞ்சமி நிலங்கள் பிறராலும், தனியார் நிறுவனங்களாலும் அபகரிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கண்டறிந்து நிலமற்ற பட்டியலின மக்களுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT