

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கத்தை வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேற்று தொடங்கிவைத்தார்.
வண்டலூர் பூங்காவில் உள்ள ஓட்டேரியில், உலக சுற்றுச்சூழல்தின விழா நேற்று நடைபெற்றது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார். வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கத்தை தொடங்கிவைத்து, அதுகுறித்த தகவல் கையேட்டை வெளியிட்டார்.
ஓட்டேரி ஏரியில் சுற்றுச்சூழல்சீரமைப்புப் பணிகளையும் தொடங்கிவைத்து அவர் பேசும்போது, ``தமிழகத்தில் 100 ஈர நிலங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.115 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
முதல்வரின் ட்விட்டர் பதிவு: நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு, வனத் துறைத் தலைவர் சுப்ரத் மஹாபத்ர, தலைமை வன உயிரினக் காப்பாளர் சீனிவாஸ் ரெட்டி, உறுப்பினர்-செயலர் தீபக் வஸ்தவா, செங்கல்பட்டு எம்எல்ஏ ம.வரலட்சுமி, செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ``இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் மையக்கருவாக `பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்லுங்கள்' என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அளவற்ற, தேவையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய `மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்கவேண்டும். மக்கா தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகப் பிரித்து வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரெஃபெக்ஸ் குழுமம் சார்பில் வழங்கப்பட்ட 10 ஆயிரம் மரக்கன்றுகளை, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவிடம், அமைச்சர் உதயநிதி வழங்கினார். தொடர்ந்து, முகாம் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், ரெஃபெக்ஸ் குழும இயக்குநர் அனில் ஜெயின் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
மாபெரும் அறம் செய்வோம்: பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி வெளியிட்டுள்ள உலகச் சுற்றுசூழல் நாள் வாழ்த்து செய்தியில், ``உலகின் எல்லாக் கேடுகளுக்கும் காரணமான நெகிழிக் கழிவுகளுக்கு முடிவுகட்ட உறுதியேற்போம்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ``மரம் வளர்ப்போம், சுற்றுச்சூழலைக் காக்கும் மாபெரும் அறம்செய்வோம்'' எனக் குறிப்பிட்டுள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, ``நமது புவியை அடுத்த தலைமுறை வாழ ஆரோக்கியமானதாக மாற்ற சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்'' எனத் தெரிவித்துள்ளார்.
ஈஷா அமைப்பின் காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில், சென்னை அடையாறில் உள்ள ரெயின் ட்ரீ ஹோட்டல் வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.
உதகையில் ஆளுநர்... உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவி லட்சுமியுடன் இணைந்து, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.