சுகன்யா சம்ரித்தி யோஜனாவின்கீழ் சிறந்த அஞ்சல் வட்டமாக திகழும் தமிழகம்: தலைமை அஞ்சல் துறை தலைவர் பெருமிதம்

சுகன்யா சம்ரித்தி யோஜனாவின்கீழ் சிறந்த அஞ்சல் வட்டமாக திகழும் தமிழகம்: தலைமை அஞ்சல் துறை தலைவர் பெருமிதம்
Updated on
1 min read

சென்னை: சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ், நாட்டிலேயே புதிய கணக்கு தொடங்கியதில் சிறந்த அஞ்சல் வட்டங்களில் ஒன்றாகத் தமிழகம் திகழ்கிறது என்று தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் ஜெ.சாருகேசி தெரிவித்தார்.

அஞ்சல் துறையின் சென்னைநகர மண்டலத்தில் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாகச் செயல்படும் ஊழியர்களின் செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில், மண்டல மேன்மை விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2022-23-ம் ஆண்டில் மண்டல மேன்மை விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

விழாவில், தலைமை விருந்தினராக, தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் ஜெ.சாருகேசி கலந்து கொண்டார். அஞ்சல் துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி, அவர் பேசியதாவது:

சாதனை இலக்கை... தமிழக அஞ்சல் துறை கடந்த நிதியாண்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஊழியர்களின் சிறந்த செயல்பாட்டால், 100 சதவீதத்துக்கு மேல் சாதனை இலக்கை எட்டியுள்ளோம். வழக்கமாக, நகர மண்டலத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் சிறு சேமிப்பு பெரிய அளவில் இருக்காது.

ஆனால், கடந்த நிதியாண்டில் சிறுசேமிப்பு பிரிவில் சென்னை நகர மண்டலம் பெரிய அளவில் சாதனை படைத்துள்ளது. 2022-23-ம்நிதியாண்டில் சென்னை நகர மண்டலம் அஞ்சலக சிறுசேமிப்பு பிரிவின்கீழ், ரூ.127 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.

வணிகத் துறையில் ரூ.101.53 கோடி, வணிகம் அல்லாத துறையில் ரூ.135.89 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 2023-ம் ஆண்டு மார்ச் வரை, அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கியின் கீழ் 59 லட்சம் நேரடிக் கணக்குகள் இருக்கின்றன.

சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ் 2022-23-ம் ஆண்டுக்கான புதிய கணக்குகளைத் தொடங்குவதில் நாட்டிலேயே சிறந்துவிளங்கும் அஞ்சல் துறை வட்டங்களில் தமிழகம் ஒன்றாகும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், தமிழக வட்ட அஞ்சல் துறைத் தலைவர் (வணிக மேம்பாடு) பி.பி.தேவி, தமிழக வட்ட அஞ்சல்துறை இயக்குநர் பி.ஆறுமுகம், சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜி.நடராஜன் உள்பட பலர் பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in