Published : 06 Jun 2023 06:46 AM
Last Updated : 06 Jun 2023 06:46 AM
சென்னை: புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலைத் தயாரித்த உம்மிடி பங்காரு குடும்பத்தினருக்கு, அகில இந்திய ஜெம் அண்டு ஜுவல்லரி டொமெஸ்டிக் கவுன்சில் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
நகைகள் தயாரிப்புத் தொழில் துறையின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, அகில இந்திய ஜெம் அண்டு ஜுவல்லரி டொமெஸ்டிக் கவுன்சில் சார்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது.
இந்திய சுதந்திரத்தின்போது பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல், தற்போது புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த செங்கோலை வடிவமைத்து, உருவாக்கிய உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தினருக்கு இந்த நிகழ்ச்சியில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இதில் உம்மிடி எத்திராஜுலு, அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
கவுன்சில் இயக்குநர் அசோக் ஜெயின் வரவேற்றார். தலைவர் சயம் மெஹ்ரா தலைமை வகித்துப் பேசும்போது, "பணமோசடி தடுப்புச்சட்டம் காரணமாக, கடந்த சில மாதங்களாக நகைத் தொழில் துறை தெளிவற்ற நிலையில் உள்ளது. மேலும், ஹால்மார்க்கிங் தொடர்பான சிக்கல்களும் நிலுவையில் உள்ளன. இதற்காக நமது கவுன்சில், பிஐஎஸ் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்துடன் தொடர்புகொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயற்சி மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் நடைபெறும் ‘லாபம்’ கருத்தரங்கில், ஹால்மார்க்கிங், ஜிஎஸ்டி உள்ளிட்டபிரச்சினைகள், நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும். இந்த நிதியாண்டுக்குள் 30-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
பின்னர் சயம் மெஹ்ரா செய்தியாளர்களிடம் கூறும்போது, "தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மும்பையில் உள்ள ஜியோஉலக மாநாட்டு மையத்தில் நகைக்கண்காட்சி வரும் செப். 30 முதல் அக். 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் 800-க்கும் மேற்பட்ட நகை நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்தக் கண்காட்சியை விளம்பரப்படுத்தும் நோக்கில், இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்து, துபாய்,வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் 100-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இக்கண்காட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாடு, வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் பங்கேற்பர். மேலும், 80 டன் அளவுக்கு தங்கம், வைர நகைகள் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3 முதல் 4 லட்சம் வரையிலான நகை டிசைன்கள் காட்சிப்படுத்தப்படும்" என்றார்.
இந்தக் கருத்தரங்கில், கவுன்சில் துணைத் தலைவர் ராஜேஷ் ரோக்டே, ஒருங்கிணைப்பாளர் சாஹில் மெஹ்ரா மற்றும் நகை வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள், நகைக் கடை உரிமையாளர்கள், நகைப் பட்டறை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT