

சென்னை: அரபிக் கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவது தாமதமாகியுள்ளது. தமிழகம் நோக்கி பருவக்காற்று வீசாததால், தமிழகத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது.
அந்தமான் பகுதியில் மே 20-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டது. கேரளாவில் வழக்கம்போல ஜூன் 1-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. முந்தைய, பிந்தைய 4 நாட்களில் பருவமழை தொடங்கினாலும், அது வழக்கமான காலத்தில் தொடங்கியதாகவே கருதப்படும்.
எனினும், ஜூன் 5-ம் தேதிக்கு மேல் பருவமழை தொடங்கினால், தாமதமாக தொடங்கியதாக அறிவிக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு இதுவரை தென்மேற்குப் பருவமழை தொடங்கவில்லை.
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கினால், தமிழகத்தில் வெயில் குறையத் தொடங்கும். பருவமழை தாமதத்தால் தமிழகத்தில் மே மாதத்தைவிட, ஜூன் மாதத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஜூன் மாதத்தில்தான் நுங்கம்பாக்கத்தில் 108 டிகிரி வெயில் பதிவானது.
105 டிகிரி வெயில்: நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்ப அளவுகளின்படி, அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் தலா 105 டிகிரி, நுங்கம்பாக்கம், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி, மதுரை மாநகரம், கடலூர், திருச்சி, கரூர் பரமத்தியில் 103 டிகிரி, வேலூர், திருப்பத்தூர், புதுச்சேரி, தஞ்சாவூர், நாகப்பட்டினத்தில் 102 டிகிரி, காரைக்கால், தூத்துக்குடி, ஈரோட்டில் 101 டிகிரி, தருமபுரியில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தாமதம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது:
அரபிக் கடலில் நிலவும் காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் காற்று வீசும் திசை மாறி, தென்மேற்குப் பருவக்காற்று வீசுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பருவமழை தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வெப்பநிலை உயரும்... இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை உயர்ந்தே இருக்கும்.
வரும் 8-ம் தேதிக்கு மேல் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இப்போது கேரளாவில் மழை பெய்துவந்தாலும், 60 சதவீதத்துக்கு மேல் மழை பெய்தால்தான், பருவமழை தொடங்கியதாக அறிவிக்க முடியும். பருவமழை தொடங்கிய பிறகே, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.