

சென்னை: கொலை, கொள்ளை, வழிப்பறி, முன்விரோத மோதல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க, போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, தினமும் சுழற்சி முறையில் வாகன சோதனை நடத்தப்படுகிறது.
இந்த சோதனையின்போது, மதுபோதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள், போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்கள், திருட்டு, மோசடி,கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் என பல்வேறு வகையான குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டு காவல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதுபோல, விபத்துகளில் சிக்கும் வாகனங்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன.
இவ்வாறு, பிடிபடும் அல்லது பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறும். வழக்குகள் நீதிமன்ற கட்டுப்பாட்டுக்குள் வருவதால், விசாரணை முடிந்த பின்னரே உரியவர்களிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்படும். இது நடைமுறை. வழக்குகள்நீதிமன்றத்தைவிட்டு நகராததால், வாகனங்களும் காவல் நிலையத்தைவிட்டு நகர முடிவதில்லை.
மேற்கூரை இல்லாத வெட்ட வெளியில் இந்த வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மாறி மாறி வெயில், மழைக்காலங்களை எதிர்கொண்டு, நாளாவட்டத்தில் துருப்பிடிக்கின்றன. மெல்ல, சிதிலமடைந்து, எலும்புக்கூடாக மாறத் தொடங்குகின்றன. மேலும், கேட்பாரற்ற வாகனங்கள் என்பதால் இன்ஜின், டயர், பேட்டரி உள்ளிட்ட முக்கிய உதிரி பாகங்களை கழற்றி (திருடி), பழைய இரும்புக் கடைகளில் விற்கப்படுவதும் உண்டு. சென்னை காவல் பகுதியில் இதுபோல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பரிதாபமான நிலையில் உள்ளன.
எனவே, குற்ற வழக்குகள் விரைவாக முடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்படும் பல லட்சம் மதிப்புடைய கார், ஆட்டோ, பைக்உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களையும் உரியவர்களிடம் விரைந்து ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அதுவரை வாகனங்களை போலீஸார் பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டும் அல்லது பிரத்யேக கிடங்குகள் அமைத்து அங்கு வாகனங்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘காவல் துறையினரிடம் சிக்கும் வாகனங்களில் ஒருசில வாகனங்களை மட்டுமே உரியவர்கள் திரும்ப பெற்றுச் செல்கின்றனர். பெரும்பாலான வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல், திருடப்பட்டதாக இருப்பதால் அவற்றை யாரிடமும் ஒப்படைக்க முடியாத நிலை உள்ளது. அதனால், காவல் நிலைய வளாகத்தில் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படுவதால் துருப்பிடித்து வீணாகிறது.
தவிர, காவல் நிலையத்தில் இதுபோன்ற வாகனங்கள் சேர்ந்துகொண்டே போவது, போலீஸாருக்கும் சுமைதான். காரணம், வழக்கு விசாரணை நீண்டு கொண்டே செல்லும்போது வாகனம் மக்கினாலும் அவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு உள்ளது. இவற்றை நீதிமன்றத்திலேயே வைத்தால் எங்கள் சுமை குறையும்’’ என்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வை.வர்கீஸ் அமல் ராஜா: மதுபானம், ரேஷன் அரிசி கடத்தல்வழக்குகளில் சிக்கும் வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாது. அவற்றை போலீஸார்பறிமுதல் செய்து வருவாய் துறையினரிடம் ஒப்படைப்பார்கள். அதேபோல, மோசடி பணத்தில் வாங்கப்பட்ட வாகனங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து, வருவாய் துறையினரிடம் ஒப்படைப்பார்கள்.
இந்த வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டு அந்த பணம் அரசு கருவூலத்துக்கு செல்லும். கொலை உள்ளிட்ட குற்ற வழக்கில் தொடர்புடைய வாகனங்களை, வழக்கு முடிந்தபிறகு தேவைப்பட்டால் உரிமையாளர்கள் உரிமை கோரி பெற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அவையும் ஏலம் விடப்படும்.
வாகனங்களை திரும்ப ஒப்படைப்பது, வாகனங்களை யாரும் கேட்காதபட்சத்தில் கீழ் நீதிமன்றங்கள் அவற்றை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும் என உச்ச, உயர் நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்துள்ளன. அதை கீழ் நீதிமன்றங்கள் முறையாக பின்பற்றுவது இல்லை. இதனால்தான், காவல் நிலையங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய வாகனங்கள், உரிமையாளர்கள் கண் முன்னே துருப்பிடித்து, வீணாகின்றன. அப்படி, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முடியாத வாகனங்களை, விதிமுறைகளுக்கு உட்பட்டு பொது ஏலம் மூலம்விற்று, அந்த பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா:பறிமுதல் செய்யப்பட்ட குற்ற வழக்குகள் தொடர்புடைய வாகனங்களை சட்டத்துக்கு உட்பட்டு உரிமையாளர்களிடம் விரைந்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களை சிதிலமடைய விடக்கூடாது என்று போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் கிடக்கும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
எந்த வாகனமாக இருந்தாலும் பலரது பல மாத உழைப்பும், சேமிப் பும் அதன் பின்னால் இருக்கிறது. பார்த்துப் பார்த்து வாங்கி, பத்திரமாக பாதுகாத்த வாகனம், வழக்கில் சிக்கிய காரணத்துக்காக, கண் முன்னால் நிறம் மங்கி, துருப்பிடித்து, எதற்கும் உதவாமல் போவது பெரும் வேதனை.
எனவே, குற்ற வழக்குகள் நிரூபிக்கப்பட்டால், வாகனங்களை உடனடியாக ஏலம் விட்டு பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும். அல்லது வழக்குவிசாரணையை விரைந்து முடித்து உரிமையாளர்களிடம் வாகனங்களை ஒப்படைக்க வேண்டும். நடவடிக்கை எடுக்குமா சென்னை காவல் துறை.