Published : 06 Jun 2023 06:12 AM
Last Updated : 06 Jun 2023 06:12 AM
விருத்தாசலம்: ராமநத்தம் அருகே பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை, வாகையூரைச் சேர்ந்த செந்தில்குமார் (43) என்பவர் கடந்த மே 22-ம் தேதி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கினார். இதனால் மனமுடைந்த அந்த சிறுமி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து வீட்டில் தூக்கில் தொங்கினார். அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமநத்தம் போலீஸார் போக்ஸோ சட்டத்தில் செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பின் சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். அப்போது வாகையூரைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு, குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் அல்லது ஜாமீனில் வெளியே வரமுடியாத வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, சிறுமியின் உடலை சுமந்து வந்த ஆம்புலன்ஸை மறித்து ராமநத்தம் - விருத்தாசலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT