கடலூர் | அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் மக்களை அச்சுறுத்துகிறது வெயில்
கடலூர்: அக்னி நட்சத்திரம் முடிந்தும் கடும் வெயிலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் தற்போது வரை சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அனல் காற்று வீசி வருவதால் இரவு நேரங்களில் வழக்கத்தை விட புழுக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் தூக்கமின்றி பாதிக்கப்படுகின்றனர்.
இதுதொடர்பாக வானிலையாளர் பாலமுருகன் கூறுகையில், “கடலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. இந்நிலையில் கடல் பகுதியில் இருந்து மேற்கு திசை காற்று மிக வலிமையாக வறண்ட காற்றாக வருவதால் அனல் காற்று அதிகரித்து சுட்டெரிக்கும் வெயில் தாக்கி வருகிறது.
கிழக்கு பகுதியிலிருந்து வரக்கூடிய ஈரக்காற்று மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் தற்போது கிழக்கு காற்று தாமதமாக வருகிறது. இது மட்டுமின்றி தென்மேற்கு பருவமழை எப்போதும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும்.
ஆனால் இதுவரை தென்மேற்கு பருவ மழை கேரளா பகுதியில் தொடங்காததால் தமிழகத்தில் தொடர்ந்து வெயில் தாக்கி வருகிறது. கேரளா பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்பட்சத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும். எனவே வருகிற 2 நாட்களும் இதேபோன்ற வறண்ட நிலை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து தான் காணப்படும்” என்றார்.
