டெங்கு இறப்புகளுக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகள் செயல்படுத்தப்படாததே காரணம்: அன்புமணி

டெங்கு இறப்புகளுக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகள் செயல்படுத்தப்படாததே காரணம்: அன்புமணி
Updated on
2 min read

டெங்கு தாக்குதலின் பழியை மக்கள் மீது போட்டு, டெங்குவிடம் இருந்து காத்துக்கொள்ளும் பொறுப்யையும் மக்கள் மீதே சுமத்தும் போக்கினை கைவிட்டு, டெங்கு தாக்குதலுக்கு முதன்மை காரணமாகவுள்ள தமிழ்நாடு அரசும், நகர்ப்புற உள்ளாட்சிகளும் இந்திய அரசின் 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகளை முழுமையாக நிறைவேற்றி டெங்கு காய்ச்சலுக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "டெங்கு காய்ச்சலால் தமிழக மக்கள் தாக்கப்பட்டிருப்பதற்கு தமிழக அரசின் செயல்படாத தன்மைதான் முழு காரணம் ஆகும். இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 எனும் சட்டப்பூர்வ விதிகளை தமிழ்நாடு அரசு முறையாக நிறைவேற்றியிருந்தால் இப்போதைய டெங்கு காய்ச்சல் தடுக்கப் பட்டிருக்கும். தமிழ்நாடு அரசு கடமை தவறியதே இப்போதைய டெங்கு உயிரிழப்புகளுக்கு காரணமாகும்.

டெங்கு வைரஸ் நேரடியாக ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு தொற்றுவதில்லை. ஏடீஸ் வகைக் கொசுக்கள் தான் டெங்கு காய்ச்சலை மனிதர்களிடையே பரப்புகின்றன. டெங்குவைப் பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் நல்ல நீரில்தான் உற்பத்தியாகின்றன. கழிவு நீர், சாக்கடைப் போன்ற இடங்களில் இவை உற்பத்தியாவது இல்லை. ஆறு, குளம், ஏரி, மரம் என இயற்கையான எந்த இடத்திலும் டெங்குவைப் பரப்பும் கொசு உற்பத்தியாவது இல்லை. ஏடீஸ் கொசு முட்டையிடுவதும், இனப்பெருக்கம் செய்வதும் முழுக்க முழுக்க மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களில் தான்.

நகர்ப்புறங்களில் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தாமல் விட்டுவிடுவதும், பள்ளி, அரசு அலுவலகம் போன்ற இடங்களில் குப்பை தேங்குவதும் டெங்கு பரவுவதற்கு மிக முக்கியமான காரணம் ஆகும். இங்கெல்லாம் தேங்கிக் கிடக்கும் குப்பைகளில் பிளாஸ்டிக் குவளை, காகிதக் குவளை, வாகன டயர், டப்பாக்கள், குளிர்பான பாட்டில், கேன், கண்ணாடிக் குவளை என தண்ணீர் தேங்கும் பொருட்கள் மிகுதியாக உள்ளன.  லேசான மழை பெய்தாலும் கூட இவற்றில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இப்படி தேங்கும் நன்னீரில்தான் ஏடீஸ் கொசுக்கள் முட்டையிட்டு, பெருமளவில் இனப்பெருக்கம் செய்கின்றன.

எனவேதான், நகரங்கள், சிறு நகரங்கள், நகர்ப்புறங்களை ஒட்டியிருக்கும் கிராமங்கள் - என நகரம் சார்ந்த பகுதிகளையே டெங்கு அதிகமாக தாக்குகிறது. குப்பை தேங்காமல் தடுக்கும் சட்டவிதிகள் ஏற்கனவே உள்ளன. ஆனால், தமிழக அரசும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் அவற்றை முறையாக செயல்படுத்தாமல் மெத்தனமாக இருப்பதுதான் இப்போதைய டெங்கு தாக்குதலுக்கு காரணம் ஆகும்.

திடக்கழிவு, பிளாஸ்டிக் கழிவு, மின்னணு கழிவு, ஆபத்தான கழிவு, மருத்துவக் கழிவு, கட்டடக் கழிவு என குப்பை மேலாண்மைக்கான 6 விதிகள் 2016 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்திய அரசால் வெளியிடப்பட்டன. மாநிலங்களும் நகராட்சிகளும் இந்த விதிகளை செயலாக்குவதற்கான பொதுவான கால அவகாசம் ஓராண்டு வரை அளிக்கப்பட்டது. ஆனால், விதிகளை  மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் முறையாக செயல்படுத்தத் தவறிவிட்டன.

மாநில அரசுகளின் மெத்தனப்போக்கை கண்டித்த இந்திய பசுமைத் தீர்ப்பாயம் 2017 ஜூன் 1 முதல் குப்பை மேலாண்மை விதிகளை தமிழக நகரங்கள் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து நகரங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. 2017 ஜூன் 5 சுற்றுச்சூழல் தினத்திலிருந்து நாட்டின் எல்லா நகரங்களிலும் இதற்கான பிரச்சார இயக்கத்தை தொடங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால், இன்னமும் கூட சட்ட விதிகள் வெற்று காகிதமாகவே உள்ளன.

மக்கள் குப்பையை வகை பிரித்து அளிப்பதன் மூலமும், நகராட்சிகள் மக்களிடம் குப்பையை தரம் பிரித்து பெற்று அவற்றை மறுசுழற்சி செய்தல் மற்றும் மக்க வைப்பதன் மூலமும் - நகரங்களின் குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாணும் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு இப்போதாவது முறையாக செயல்படுத்த முன்வர வேண்டும். இந்தியாவிலேயே மிக அதிகமானோர் நகரங்களில் வாழும் மாநிலம் தமிழ்நாடு. தமிழக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் நகரங்களில் வசிக்கின்றனர். இந்தியாவிலேயே தனிநபர் அளவில் அதிக குப்பையை உருவாக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். இந்திய மாநகரங்களில் அதிக குப்பையை உருவாக்கும் மாநகரம் சென்னை. குப்பை மேலாண்மையில் இந்திய கடைசி இடத்தில் இருப்பதும் சென்னை மாநகரம் தான். எனவே, குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்கு அதிகம் இருக்கிறது.

டெங்கு தாக்குதலின் பழியை மக்கள் மீது போட்டு, டெங்குவிடம் இருந்து காத்துக்கொள்ளும் பொறுப்யையும் மக்கள் மீதே சுமத்தும் போக்கினை கைவிட்டு, டெங்கு தாக்குதலுக்கு முதன்மை காரணமாகவுள்ள தமிழ்நாடு அரசும், நகர்ப்புற உள்ளாட்சிகளும் இந்திய அரசின் 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகளை முழுமையாக நிறைவேற்றி டெங்கு காய்ச்சலுக்கு முடிவு கட்ட வேண்டும்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in