Published : 15 Oct 2017 09:19 AM
Last Updated : 15 Oct 2017 09:19 AM

5 இடங்களில் 1600 ரகங்களுடன் தீபாவளி பட்டாசு விற்பனை

சென்னை தீவுத் திடல், ராயப்பேட்டை ஒய்எம்சிஏ உள்ளிட்ட 5 இடங்களில் சுமார் 1600 ரகங்களுடன் தீபாவளி பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் பட்டாசு விற்பனை தொடங்கப்படுவது வழக்கம். அவ்வாறு, இந்த ஆண்டு, தீவுத் திடல், ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம், அண்ணாநகர் கந்தசாமி விளையாட்டு திடல், நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகில், கொட்டிவாக்கம் ஒஎம்சிஏ மைதானம் என 5 இடங்களில் தீபாவளி பட்டாசு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கூட்டுறவுத்துறை சார்பில், டியூசிஎஸ் காமதேனு கூட்டுறவு அங்காடிகள் மூலம் 10 இடங்கள், மற்ற கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 14 இடங்கள் என சென்னையில் மொத்தம் 24 இடங்களில் பட்டாசுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு தீவுத் திடலில் பட்டாசு விற்பனை நிலவரம் தொடர்பாக சென்னை பட்டாசு வியாபாரிகள் நலச்சங்க பொருளாளர் முஜிபுர் ரஹ்மான் கூறியதாவது: இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டாலும், சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் 10 சதவீதம் விலை குறைப்பு செய்துள்ளன. அதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு விலை 10 சதவீதம் குறைந்துள்ளது.

தற்போது குறைந்தபட்சமாக ரூ.160 விலையில் 20 வகை பட்டாசுகள் கொண்ட பரிசு பெட்டகம் கிடைக்கிறது. இது கடந்த ஆண்டு ரூ.400 ஆக இருந்தது. இங்கு 60 கடைகளை திறந்துள்ளோம். சுமார் 1600 ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

இதில் சுமார் 600 ரகங்கள் புதிய ரகங்களாகும். இங்கு காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை கடைகள் திறந்திருக்கும். 17-ம் தேதி இரவு முழுவதும் கடைகள் திறந்திருக்கும். 18-ம் தேதியும் கடைகள் உண்டு. பலர் குறிப்பிட்ட பட்டாசை எப்படி வெடிப்பது என்றே தெரியாமல் வெடிக்கின்றனர். அதனால், மக்கள் கடைசி நேரத்தில் பட்டாசு வாங்க வருவதைத் தவிர்த்து, முன்னதாகவே வந்து வாங்கிச் செல்ல வேண்டும்.

அப்போதுதான் சம்பந்தப்பட்ட பட்டாசின் சிறப்புகள் குறித்து, பொதுமக்களுக்கு நாங்கள் விளக்க ஏதுவாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x