Published : 25 Oct 2017 12:26 PM
Last Updated : 25 Oct 2017 12:26 PM

கோவைக்கு விஜயமான காஷ்மீர் ‘இந்தியன் பிட்டா’

இமயமலைக்கு தென்புறத்தில் காஷ்மீர் பகுதியில் இனப்பெருக்கம் செய்து, கடும் குளிர்காலத்தில் தென்னிந்திய பகுதிகளான கர்நாடகா, கேரளா, தமிழகப் பகுதிகளுக்கும் இலங்கைக்கும் சென்று வரும் சிறு பறவை இந்தியன் பிட்டா (Indian Pitta). வானவில்லின் ஏழு வண்ணங்களுடன் கருப்பு, வெண்மை இரண்டறக் கலந்து காணப்படும் இப்பறவை மரங்களில் கூடுகட்டி தங்கினாலும், அவ்வளவு சுலபமாய் கண்களி்ல் அகப்படாது.

தரையில் வளர்ந்து நிற்கும் புல்வெளிகள், செடிகொடிகள், சருகுகளுக்குள் கிளறிக் கிளறி அதில் காணப்படும் புழு, பூச்சிகளை பிடித்து சாப்பிடும் குருவியாதலால், புதர்கள் மற்றும் குப்பைகளுக்குள்ளேயே மறைந்து ஊர்ந்து கொண்டிருக்கும் இந்த குருவி சமீப காலமாக கோவையின் கணுவாய், மருதமலை, சிறுவாணி, ஆனைகட்டி பகுதிகளில் தற்போது வரத் தொடங்கியுள்ளது. இதில் ஒரு குருவியை சமீபத்தில் புகைப்படம் பிடித்துள்ளார் கோவையை சேர்ந்த பறவைக் காதலர் டென்னிஸ் சுப்பிரமணியம்.

அவர் கூறும்போது, ‘சிட்டு போல் சிறிய வடிவம் கொண்டது. அவ்வளவு சுலமாக கண்களில் தென்படாது. செடி, கொடிகளுக்குள் குப்பைகளை, புதரை கிளறும்போது கீ, கீ என ஒருவிதமாக விட்டு விட்டு விசில் சத்தம் எழுப்புவதில்தான் அது அங்கே இருப்பதே தெரியும். பறக்கும்போது நீல வண்ணத்தில் சுடர்விடும் பறவை, அமர்ந்திருக்கும்போது பச்சை, ஆரஞ்சு, மஞ்சள், கிரே, ஊதா, வெள்ளை ஆகிய நிறங்களில் மினுங்கும். வடக்கே குளிர்சீசன் ஆரம்பிக்கும்போது அக்டோபர், நவம்பரில் வந்து விட்டு ஏப்ரல் மே மாதத்தில் வடநாட்டுக்கே திரும்பிச் சென்று விடும்.

பொதுவாக இக்குருவிகளை ஜோடியாக பார்ப்பதும் அரிது. இது ஒரு பகுதியில் இருந்தால் அதிக பட்சம் ஏழெட்டு குருவிகளே இருக்கும். அதுவும் தனித்தனியாக புதருக்குள் கிளறிக் கொண்டிருக்கும். மரத்தில் அடையும் போது மட்டும் கிளைக்கு கிளை தாவும்.

25cbksv01-subramaniam டென்னிஸ் சுப்பிரமணியம்.

இந்த ஆண்டு மருதமலை பக்கத்தில் இந்த குருவியை புகைப்படம் எடுக்க முடிந்தது

இந்த வகை பறவையை படம் பிடிப்பதில், அதன் செயல்பாடுகளை ஆராய்வதில் இயற்கை ஆர்வலர்களுக்கு ஆர்வம் அதிகம். அதற்காக கர்நாடகாவில் கணேஷ்குடி என்ற பகுதியில் வனத்துறையினரே இந்த பறவைகள் தங்குவதற்கும், பார்வையாளர்கள் பார்ப்பதற்கும், படம் பிடிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதேபோல் கேரளா பகுதியில் சில வீடுகளில் இது சாப்பிடும் புழு, பூச்சிகள் இருக்கும் புற்செடிகளை வளர்த்து வைக்கிறார்கள். இந்த குருவி வந்து செல்லும் சீசனில் பறவை ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிவிக்கிறார்கள். இதை நன்றாகப் பார்க்க வேண்டும் என்றால் மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டும்’ என்றார்.

இதன் சிறகுப் போர்வையில் பல நிறங்கள் இருப்பதாலும், புழு, பூச்சிகளை தேடித்தேடி உண்பதாலும் இதற்கு பஞ்சவர்ணக் குருவி, ஆறுமணிக்குருவி, பொன்னுத் தொட்டான், பச்சைக்காடை, காசிக்கட்டிக் குருவி, கஞ்சால் குருவி, காளிக்குருவி என்று பெயர் வைத்துள்ளார்களாம் கிராமத்து மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x