Published : 11 Oct 2017 10:34 AM
Last Updated : 11 Oct 2017 10:34 AM

பைபாஸ் அறுவை சிகிச்சை உபகரணங்கள் இல்லாமல் இளம் பெண்ணின் மகாதமனி அடைப்பு 20 நிமிடத்தில் சரிசெய்யப்பட்டது: சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் சாதனை

இந்தியாவில் முதல்முறையாக பைபாஸ் அறுவை சிகிச்சை உபகரணங்களின் உதவி இல்லாமல் 20 நிமிடங்களில் இளம் பெண்ணின் மகாதமனி அடைப்பை சரிசெய்து சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பா.மாரியப்பன் சாதனை படைத்துள்ளார்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 30 வயதான இவர், குழந்தையின்மை, நடக்கும்போது கால்களில் வலி, மூச்சு வாங்குதல் போன்ற பிரச்சினைகளுக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வந்தார். இதய அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் டாக்டர் பா.மாரியப்பன் பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது இதயத்தில் இருந்து உடலின் எல்லா பாகங்களுக்கும் சுத்தமான ரத்தத்தை கொண்டு செல்லும் மகாதமனி ரத்தக்குழாயில் (அயோட்டா) பிரச்சினை இருப்பது தெரியவந்தது. அடுத்தகட்ட பரிசோதனையில் இடது கையின் கீழே செல்லும் மகாதமனி ரத்தக்குழாய் சுருங்கி ரத்த ஓட்டம் தடைப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து டாக்டர் பா.மாரியப்பன் தலைமையில் டாக்டர்கள் மணிகண்டன், சிவகாந்த், செவிலியர் ஜமுனா ஆகியோர் கொண்ட குழுவினர் பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்கான உபகரணங்களைப் பயன்படுத்தாமலும், நெஞ்சுப் பகுதி எலும்புகளை வெட்டாமலும் விலா எலும்பு வழியாக சுருங்கியிருந்த ரத்தக் குழாயை அகற்றிவிட்டு செயற்கை ரத்தக்குழாயை வெற்றிகரமாக பொருத்தினர்.

இது தொடர்பாக இதய அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் டாக்டர் பா.மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதா வது:

இந்த பெண்ணுக்கு பிறவியிலேயே மகாதமனி ரத்தக்குழாய் சுருக்கத்தால் பிரச்சினை இருந்துள்ளது. சிறு வயதில் சிறியதாக இருந்த ரத்தக்குழாய் சுருக்கம், தற்போது அதிகரித்து ரத்தக் குழாயில் அடைப்பும் ஏற்பட்டுள்ளது. ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்ததால், பக்கவாட்டில் மட்டும் சிறிய அளவில் ரத்த ஓட்டம் இருந்தது. இதனால்தான் நடக்கும்போது கால்களில் வலி, மூச்சு வாங்குதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளன. 10 லட்சம் பேரில் 3 பேருக்குத்தான் இதுபோன்ற பிரச்சினை ஏற்படும். இந்த பிரச்சினையுடன் பிறக்கும் குழந்தைகள் முறையான சிகிச்சை பெறவில்லை என்றால் சில ஆண்டுகளில் உயிரிழக்க நேரிடும்.

20 நிமிடத்தில் சாதனை

உலக அளவில் இந்த பிரச்சினைகளுடன் இருந்த நடுத்தர வயதை கொண்ட 13 பேருக்கு தான் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதுவும் பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்கான உபகரணங்களைப் பயன்படுத்தி அவற்றை செய்துள்ளனர். இந்தியாவில் முதல் முறையாக பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்கான உபகரணங்களை பயன்படுத்தாமல் இந்த பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை செய்துள்ளோம். பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்கான உபகரணங்களை பயன்படுத்தி செய்யும்போது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அறுவைச் சிகிச்சை செய்யலாம். ஆனால் பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்கான உபகரணங்களை பயன்படுத்தாமல் செய்யும்போது விரைவில் அறுவைச் சிகிச்சையை முடித்துவிட வேண்டும். இல்லையென்றால் பக்கவாதம் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பு போன்றவைகள் ஏற்படும். விரைவாக 20 நிமிடங்களில் அந்த பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை செய்ததால் பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்படவில்லை. அந்த பெண்ணும் நலமாக இருக்கிறார். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்ட இந்த அறுவைச் சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.5 லட்சத்துக்கும் மேல் செலவாகும்.

இவ்வாறு டாக்டர் பா.மாரியப்பன் தெரிவித்தார்.

பேட்டியின்போது மருத்துவமனை டீன் நாராயணபாபு, மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயணசாமி, ஆர்எம்ஓ இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x