Last Updated : 21 Oct, 2017 09:06 AM

 

Published : 21 Oct 2017 09:06 AM
Last Updated : 21 Oct 2017 09:06 AM

பேருந்து நிலையத்தில் ஒளிபரப்பாகும் வீடியோவால் குழப்பம்: மலைவேம்பு இலை சாற்றை டெங்குவுக்கு அருந்த வேண்டாம் - சித்த மருத்துவர்கள் வேண்டுகோள்

டெங்கு காய்ச்சலுக்கு மலைவேம்பு இலைச் சாறு அருந்த வேண்டாம். நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச் சாறு மட்டும் அருந்த வேண்டும் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டில் கடந்த 15-ம் தேதி வரை டெங்குவால் 12,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச் சாறு அருந்தும்படி தமிழக அரசு பரிந்துரை செய்து வருகிறது. ஆனால், டெங்கு காய்ச்சலுக்கு மலைவேம்பு இலைச் சாறு அருந்தும்படி தமிழக அரசு இந்த ஆண்டு பரிந்துரை செய்யவில்லை. கடந்த 2012-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பப்பாளி இலைச் சாறு, மலைவேம்பு இலைச் சாறு, நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் முறை மற்றும் அருந்தும் முறை குறித்த விழிப்புணர்வு வீடியோ வாகனங்கள் மூலமாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் காய்ச்சலுக்கு மலைவேம்பு இலைச் சாறு பயன்படுத்தலாமா வேண்டாமா என்ற குழப்பம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

மலைவேம்பு ஆராய்ச்சி இல்லை

நிலவேம்பு குடிநீர் குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதுபற்றி ஆராய்ச்சி செய்த கிண்டியில் உள்ள நோய் தடுப்பு கிங் மருத்துவ நிலையம் (கிங் இன்ஸ்டிடியூட்) இயக்குநர் டாக்டர் பி.குணசேகரனிடம் கேட்டபோது, “நிலவேம்பு குடிநீர் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். பப்பாளி இலைச் சாறு ரத்த அணுக்களை அதிகரிக்கும் என்பது ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மலைவேம்பு இலைச் சாறு குறித்த ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை” என்றார்.

தவறுதலாக பரிந்துரை

இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு மலைவேம்பு இலைச் சாறு பரிந்துரைக்காதது பற்றி சித்த மருத்துவர்களிடம் கேட்டபோது, “டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் கொடுக்க வேண்டும். அதன் மூலம் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் குணமாகும். முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே நிலவேம்பு குடிநீர் குடிக்கலாம். பப்பாளி இலைச் சாறு ரத்த அணுக்களை அதிகரிக்கும். மலைவேம்பு இலைச் சாறு கரு முட்டைகளின் வளர்ச்சிக்கான மருந்து ஆகும்.

2012-ம் ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு மலைவேம்பு இலைச் சாறு தவறுதலாக பரிந்துரை செய்யப்பட்டது. அதனால்தான் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு மலைவேம்பு இலைச் சாறு பரிந்துரை செய்யவில்லை. சித்த மருத்துவர்களும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு மலைவேம்பு இலைச் சாறு அருந்தும்படி சொல்வதில்லை. நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச் சாறு மட்டும் அருந்தும்படி சொல்கிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x