Published : 29 Oct 2017 12:40 PM
Last Updated : 29 Oct 2017 12:40 PM

ரூ.195 கோடியில் கட்டப்பட்டுள்ள காந்திபுரம் மேம்பாலத்தை நவ. 1-ம் தேதி முதல்வர் திறக்கிறார்

கோவை காந்திபுரம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ரூ.195 கோடி மதிப்பில் 2 அடுக்குகள் கொண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன்படி, டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள பார்க் கேட் சிக்னல் பகுதியில் இருந்து ஆம்னி பேருந்து நிலையம் வரை முதல்கட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. காந்திபுரம் 100 அடி சாலையில் இருந்து சின்னசாமி சாலையில் உள்ள மின் மயானம் வரை 2-வது கட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

டாக்டர் நஞ்சப்பா சாலையில் கட்டப்படும் மேம்பாலத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், அந்த மேம்பாலத்துக்கு பச்சை வர்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை தவிர, நஞ்சப்பா சாலையில் பார்க் கேட் பகுதியில் உள்ள சிக்னல் அகற்றப்பட்டு, ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட மேம்பாலப் பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் நவம்பர் 1-ம் தேதி மாலை 3.30 மணிக்கு திறப்பு விழா நடைபெறுகிறது. தமிழக முதல்வர் கே.பழனிசாமி, புதிய பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கிறார்.

இதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, இரண்டாவது கட்ட மேம்பாலத்தின் பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும். மேம்பாலம் திறக்கப்பட்ட பின்னர் காந்திபுரம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடும்' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x