மத்திய அமைச்சர் அமித் ஷா ஜூன் 8-ல் வேலூர் வருகை: வரவேற்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அமித் ஷா
அமித் ஷா
Updated on
1 min read

வேலூர்: வேலூரில் வரும் 8-ம் தேதி நடக்க உள்ள மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாபங்கேற்கிறார்.

பிரதமர் மோடியின் 9 ஆண்டு ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில், மே 30-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும், மாவட்டம்தோறும் பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த பாஜக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. வேலூரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் 8-ம் தேதி நடக்க உள்ளது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்.

முன்னதாக, பொதுக்கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, துணைத் தலைவர் நரேந்திரன், மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அமித் ஷா பங்கேற்கும் கூட்டத்தை வேலூர் அடுத்த கந்தனேரியில் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் மேலும் கூறியதாவது:

வரும் 8-ம் தேதி வேலூர் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பொதுமக்கள், தொண்டர்கள் அதிக அளவில் திரள்வார்கள் என்பதால் வேலூர் அடுத்த கந்தனேரி பகுதியில் பொதுக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.

டெல்லியில் இருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடத்தை ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளனர்.

விமானம் மூலம் சென்னை வரும்அமித் ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் கந்தனேரிக்கு வருகிறார். பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் இந்த பொதுக் கூட்டத்தில், மத்திய அரசின் சாதனைகளையும், 10-ம் ஆண்டு தொடங்க உள்ளதையொட்டி அரசின் திட்டங்கள் குறித்தும் அமித் ஷா பேச உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இக்கூட்டம் நடத்தப்படவில்லை. பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறவே இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in