

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் கல்வியாண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
அதன்பின், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அனைத்து வகுப்புகளும் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதற்கேற்ப அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் தாக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்தச்சூழலில் பள்ளிகளை திறப்பது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, பள்ளி திறப்பை மேலும் தள்ளிவைக்க வேண்டும். குறைந்தது தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்காவது விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பள்ளிகள் திறப்பை தள்ளிவைப்பது தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. எனினும், சில மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
இதுகுறித்த தகவல்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து இறுதி முடிவை அமைச்சர் விரைவில் மேற்கொள்வார்” என்றனர்.