

தாம்பரம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ஜூன் 3-ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி ஏற்பாட்டில் தங்க மோதிரங்கள் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் கலந்து கொண்டு 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், பழங்கள் மற்றும் பரிசு பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம். கடந்த 23 ஆண்டுகளாக கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் பிறந்தநாளில் குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவித்து வருகிறோம்.
இதேபோல செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, திருப்போரூர் அரசு மருத்துவமனை, குன்றத்தூர் மருத்துவமனை உட்பட மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவித்து வருகிறோம்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். செயல்வீரர்கள் கூட்டம் நடத்தியுள்ளோம். பூத் கமிட்டி அமைத்துள்ளோம். தேர்தல் ஆறு மாதத்துக்கு முன்பு வந்தாலும் அதற்கு பின்பு வந்தாலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சிகள் பெரும் வெற்றி பெறும்என்றார்.