Published : 05 Jun 2023 06:04 AM
Last Updated : 05 Jun 2023 06:04 AM

சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் சிப்காட், டிட்கோ பணிகளை தலைமைச் செயலர் ஆய்வு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சிப்காட் மற்றும் டிட்கோ நிறுவனங்களின் திட்டப் பணிகளை ஆய்வு செய்த தலைமைச் செயலர் வெ.இறையன்பு, பணிகளை விரைவில் முடிக்கும்படி உத்தரவிட்டார்.

இது தொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை நந்தம்பாக்கத்தில் டிட்கோ நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் வர்த்தக மைய விரிவாக்கப் பணிகளை தலைமைச் செயலர்இறையன்பு ஆய்வு செய்தார்.

இதில், 9 லட்சம் சதுர அடியில், ரூ.309 கோடி மதிப்பில், 4,000 பேர் அமரும் வகையில் கட்டப்பட்டு வரும் மாநாட்டு அரங்கம், 5 பொருட்காட்சி அரங்கங்கள், பன்னடுக்குவாகன நிறுத்தம் உள்ளிட்டவற்றுக்கான கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட தலைமைச் செயலர், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் முன் கட்டுமானப் பணிகளை முடிக்கும்படி அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகாலில் ரூ.680 கோடியில், 18,720 தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளின் அருகில், சிப்காட் நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பணியாளர் விடுதியை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவைப் பார்வையிட்ட அவர், மாம்பாக்கத்தில் ரூ.16.45 கோடியில் அமைந்துள்ள சிப்காட் தொழில் புத்தாக்க மையத்தை (ஃபோர்ட்) ஆய்வு செய்தார்.

இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பணிபுரியும் இடம், உபகரணங்கள் மற்றும் தயாரிப்புகள் மேம்பாட்டு மையம், முன்மாதிரி தயாரிப்பு வசதி, பயிற்சி மையத்தை ஆய்வு செய்து, சிறந்த முறையில் பராமரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னர், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் டிட்கோ நிறுவனம் சார்பில், ரூ.327 கோடியில், 5,62,000 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் டைடல் தொழில்நுட்பப் பூங்காவை ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, தொழில் துறைச் செயலர் ச.கிருஷ்ணன், டிட்கோ மேலாண் இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், சிப்காட்மேலாண் இயக்குநர் எ.சுந்தரவல்லி, டைடல் பூங்கா மேலாண் இயக்குநர் மரியம் பல்லவி பல்தேவ், சிப்காட் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உடன்இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x