மெரினாவில் கோஷ்டி மோதலை துணிச்சலாக தடுத்த பெண் காவலர்

காவலர் கலா
காவலர் கலா
Updated on
1 min read

சென்னை: மெரினாவில் கோஷ்டி மோதலை துணிச்சலாக தடுத்த பெண் காவலர், குற்றவாளிகளையும் பிடிக்க உதவினார். சமயோசிதமாக செயல்பட்ட பெண் காவலரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மெரினா கடற்கரையில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பாதுகாப்புப் பணியில் ஆயுதப்படையைச் சேர்ந்த கலா என்ற பெண் காவலர் ஈடுபட்டிருந்தார். கடற்கரையில் இரு இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. அதில் வந்த 4 இளைஞர்களும் இரு தரப்பாக மோதலில் ஈடுபட்டனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலர் கலா, இரு தரப்பையும் சமாதானம் செய்ய முயன்றார்.

அவர்கள் சண்டையை நிறுத்தாமல், தடுக்க முயன்ற பெண் காவலரை கத்தியைக் காட்டி மிரட்டினர். இருப்பினும் அவர் துணிச்சலுடன் அவர்களைப் பிடிக்க முயன்றார். இதையடுத்து 4 பேரும் வாகனத்திலேயே தப்பிவிட்டனர். அவர்களது வாகன எண்களை பெண் காவலர், தனது செல்போனில் படம் பிடித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைத்தார்.

அதன் அடிப்படையில் தப்பிய 4 இளைஞர்களையும் அண்ணா சதுக்கம் போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். அவர்கள், கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. துணிச்சலாக செயல்பட்ட பெண் காவலரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in