விருதுநகர் | இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி - கிராம மக்கள் அச்சம்

வடகரை கிராமத்தில் தேசமடைந்து இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி.
வடகரை கிராமத்தில் தேசமடைந்து இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி.
Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை கிராமத்தில் தேசமடைந்து இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

காரியாபட்டி அருகே உள்ளது பிசிண்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகரை கிராமம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

30 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டி தூண்களில் தற்போது விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றக்கோரி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்துள்ளோம்.

காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சேதமடைந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியின் புகைப்படங்களை அனுப்பியுள்ளோம். எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சேதமடைந்த இந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியை பாதுகாப்பாக அகற்றுவதுடன், புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டிக்கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in