Published : 04 Jun 2023 03:56 PM
Last Updated : 04 Jun 2023 03:56 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே 134 ஆண்டுகளுக்கு முன்பே பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக கால்வாய், கலிங்குடன் பாலத்தை திருவாவடுதுறை ஆதீனம் அமைத்ததை அங்குள்ள கல்வெட்டு மூலம் உறுதி செய்யப்படுவதாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆவுடையார்கோவில் அருகே குளத்துக்குடியிருப்பில் உள்ள பழமையான செங்கல் கட்டுமானத்தில் கட்டப்பட்ட பாலத்தில் கல்வெட்டு இருப்பது குறித்து ஆவுடையார்கோவில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பூமி. ஞானசிவம் அளித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணி கண்டன், தலைவர் கரு.ராஜேந்திரன் ஆகியோர் அண்மையில் ஆய்வு செய்தனர்.
பின்னர், கல்வெட்டு குறித்து இருவரும் கூறியதாவது: "ஆவுடையார்கோவிலில் உள்ள மாணிக்கவாசகர் கோயிலானது திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தின் 17வது பட்டமாக இருந்த அம்பலவான தேசிகர் காலத்தில் காறுபாறாக ( கோயில் மேற்பார்வையாளர் ) இருந்தவர் கண்ணப்ப தம்பி ரான். இவர், 1889-ல் அவுடையார்கோவில் தெற்கு வெள்ளாற்றில் இருந்து ஆவுடையார்கோவில் கண்மாய்க்கு நெடுந்தூரம் வாய்க்கால் வெட்டியுள்ளார்.
ஆற்றுத் தண்ணீரை அந்தக் கண்மாயில் தேக்கி வைத்து ஆவுடையார் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் விவசாயிகளின் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. வாய்க்காலின் குறுக்கே ஆவுடையார்கோவிலில் இருந்து குளத்துக்குடியிருப்புக்கு செல்லும் சாலையில் 25 மீட்டர் நீளத்துக்கு கருங்கல், செங்கல், சுண்ணாம்பு கலவையுடன் கலிங்குடன்கூடிய பாலமும் கட்டப்பட்டுள்ளது.
பாலம் கட்டி முடிக்கப்பட்டு 134 ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை இந்தப் பாலத்தின் வழியே பொதுப் போக்குவரத்து சேவை தொடரும் வகையில் பாலம் உறுதித் தன்மையுடன் இருக்கிறது. ஆன்மிகம், கல்வி, சமூக ஒற்றுமை, பொதுப் பணி, தமிழ் மொழி வளர்ச்சி என பல்வேறு பணிகளோடு விவசாயம், பொதுப் போக்குவரத்து சேவையிலும் திருவாவடுதுறை ஆதீனம் ஈடுபடுத்திக் கொண்டுள்ளதை இப்புதிய கல்வெட்டு சான்று உறுதி செய்கிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT