

சென்னை: ஒடிசாவில் நேற்று முன்தினம் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கி தவித்த தமிழக பயணிகள் ஒடிசாவின் பத்ராக்கில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
சுமார் 137 பேர் தற்போது ஒடிசாவிலிருந்து சென்னை திரும்பியுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த நபர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் நலம் விசாரித்தனர்.
அமைச்சர் உதயநிதி உட்பட அதிகாரிகள் ஒடிசா மாநிலத்தில் தற்போது மீட்பு பணிகளை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“நான் ராணுவ வீரர். ரயில் விபத்தில் சிக்கியதும் ஆட்களை வெளியே எடுப்பது கடினமாக இருந்தது. காயமடைந்த சக பயணிகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். எனது அடையாள ஆவணங்கள், ராணுவ அடையாள அட்டை, போன் மற்றும் எனது உடைமைகளை இழந்தேன். விபத்தில் உயிர் பிழைத்ததில் மகிழ்ச்சி" என இந்த ரயில் விபத்தில் உயிர் பிழைத்து சென்னை வந்த அனீஷ்குமார் தெரிவித்துள்ளார்.