Published : 04 Jun 2023 09:38 AM
Last Updated : 04 Jun 2023 09:38 AM
அருப்புக்கோட்டை: திருச்செந்தூரில் இருந்து திருச்சி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. 62 பயணிகள் இருந்த இப்பேருந்தை, மதுரை ஐராவதநல்லூரை சேர்ந்த முருகேஸ்ராஜா ஓட்டினார்.
நேற்று முன்தினம் இரவு, இப்பேருந்து அருப்புக்கோட்டை அருகே தூத்துக்குடி- மதுரை நான்குவழிச் சாலையில் பந்தல்குடி அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநர் முருகேஸ்ராஜாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவர், பேருந்தின் வேகத்தைக் குறைத்து சாலையோரத்தில் நிறுத்த முயன்றார். ஆனால், அதற்குள் இருக்கையிலேயே மயங்கி சரிந்து விழுந்தார்.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து
இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதால், நடத்துநர் திருப்பதி சாமர்த்தியமாகச் செயல்பட்டு, பிரேக்கை அழுத்தி பேருந்தை நிறுத்தினார். இதனால், பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
இதையடுத்து, ஓட்டுநர் முருகேஸ்ராஜாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், ஓட்டுநர் முருகேஸ்ராஜா அசைவின்றி இருந்ததால், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ உதவியாளர்கள் பரிசோதனை செய்து, முருகேஸ்ராஜா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர். பின்னர், அவர்கள் பாதுகாப்பாக மற்ற பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட ஓட்டுநர் முருகேஸ்ராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து பந்தல்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT