Published : 04 Jun 2023 10:13 AM
Last Updated : 04 Jun 2023 10:13 AM

புதுக்கோட்டை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலையை இடம் மாற்றியதாக சர்ச்சை

விநாயகர் சிலை மற்றும் ஐ.எஸ்.மெர்சி ரம்யா

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலையை இடம் மாற்றியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

புதுக்கோட்டையில் பழமையான கட்டிடத்தில் ஆட்சியரின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடத்தின் முன்பகுதியில் இருந்த விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியராக ஐ.எஸ்.மெர்சி ரம்யா பொறுப்பேற்றதும், விநாயகர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும், இதில் சிலை சேதமடைந்ததாகவும் சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் தகவல் பரவியது.

மேலும், இதைக் கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தகவல் பரவியதால், ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், உள்ளே செல்ல யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறும்போது, “சிலை அகற்றப்படும்போது உடைந்துவிட்டதாக கூறுவது தவறானது. சிலை பாதுகாப்பாக உள்ளது. தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் மெர்சி ரம்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் விஜயகுமார் கூறும்போது, “விநாயகர் சிலையை இடம் மாற்றவில்லை என்றும், சிலர்வதந்தி பரப்புவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். வேறு இடத்தில் விநாயகர் சிலையை வைத்தது குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. அவரது விளக்கத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. சிலையை இடம் மாற்றவில்லை என்றால், எங்களை ஏன் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. இதுகுறித்து கட்சி மேலிடத்தில் பேசி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

புதுக்கோட்டை மாவட்ட மக்கள்தொடர்பு அலுவலர் அளித்துள்ள புகைப்படத்தில், விநாயகர் சிலை வேறு இடத்தில் வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஆனால், பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, சிலையை இடம் மாற்றவில்லை என்று ஆட்சியர் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x