

விருதுநகர்: திருச்சுழி அருகே அறுவடை நேரத்தில் வயலுக்குள் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் அழுகியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருச்சுழி அருகே உள்ள கட்டனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300 ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கட்டனூரில் உள்ள பறையன்குளம் கண் மாயிலிருந்து பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. மேலும், வைகை ஆற்றிலிருந்து கிருதுமால் ஆறு வழியாக இக்கண்மாய்களுக்கு தண்ணீர் வருகிறது.
ஆனால், பல ஆண்டுகளாக இக்கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளதால், களிமண் படிந்துள்ளது. இதனால், லேசான மழை பெய்தாலும் கண்மாய் நீர் நிரம்பி அருகே உள்ள வயல்களுக்குள் புகுந்து விடுகிறது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில் குமார் கூறுகையில், "கட்டனூரில் உள்ள பறையன்குளம் கண்மாய் தூர்வாரி பல ஆண்டு களாகி விட்டன. கடந்த வாரம் பெய்த மழையால் கண்மாய் நிறைந்து வயல்களுக்குள் தண்ணீர் புகுந்து தேங்கியது. அறுவடை நேரத்தில் தண்ணீர் தேங்கியதால், சுமார் 150 ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் அழுகி சேதமடைந்துள்ளன. இப்போது மட்டுமல்ல, கடந்த 3 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது.
மிகவும் சிரமப்பட்டு விவசாயம் செய்து பயிர்களை விளைவித்தால், ஒரே மழையில் பயிர் நாசமாகி விடுகிறது. இதை சரி செய்ய கண்மாயை உடனடியாக தூர் வார வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பொதுப்பணித் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும். அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்றார்.