

மதுரை: மதுரை மாவட்டம், திருமோகூரில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் 36 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந் திருவிழாவை ஒட்டி நேற்று முன்தினம் இரவு திருமோகூர் மந்தை திடலில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிலர் நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் இரு தரப்பினரையும் சமா தானப்படுத்தினர்.
இந்நிலையில், நள்ளிரவில் சிலர் ஒரு பகுதியினர் வசிக்கும் தெருவுக்குள் நுழைந்து அங்கு வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தினர். மேலும் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை கம்புகளால் தாக்கி உடைத்தனர். இதில் 36 இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் சேதமடைந்தன.
இந்த தாக்குதலில் மணிமுத்து, செந்தில் குமார், முத்துகுமார், பழனிகுமார் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், டிஎஸ்பி சீதாராமன், ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் புகழேந்தி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
இந்த மோதல் தொடர்பாக ஒத்தக்கடை போலீஸார் 24 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யக் கோரி ஒத்தக் கடையில் ஒரு தரப்பினர் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.