Odisha Train Accident | விபத்துக்கு பொறுப்பேற்க போவது யார்? - ஆ.ராசா கேள்வி

ஆ.ராசா | கோப்புப்படம்
ஆ.ராசா | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “தமிழ்நாட்டில் எதற்கெடுத்தாலும் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறும் பாஜக இதுவரை வாய் திறக்காதது ஏன்?; தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் நடந்த இந்த விபத்துக்கு பொறுப்பேற்க போவது யார்?” என திமுக எம்.பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பேட்டியளித்த அவர், “நேற்றைய தினம் ஒடிசாவில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில் 290-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஒடிசா மாநில முதலமைச்சரை தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார். தொடர்ந்து அமைச்சர்கள் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவை அனுப்பி வைத்தார். சென்னைக்கு வரவேண்டியவர்களை அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்மண்டல ரயில்வே கன்ட்ரோல் அறையுடன் இணைந்து செயல்படுவதற்கு ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு சென்று ஆலோசனை நடத்தியுள்ளார். இந்திய துணை கண்டத்தை உலுக்கிய விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். உடல்கள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்” என்றார்.

மேலும், “திமுகவோ, முதலமைச்சர் ஸ்டாலினோ இந்த விவகாரத்தை அரசியல்படுத்த விரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் இந்தியாவின் பழைய வரலாறு சொல்வது இதுபோன்ற விபத்துகளின்போது அந்தந்த அமைச்சர்கள் பொறுப் பேற்றிருக்கிறார்கள். லால் பகதூர் சாஸ்திரி, நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்களும் இதில் அடங்குவர். மம்தா பானர்ஜி எங்களின் திட்டத்தை நீங்கள் கவாச் என பெயர் மாற்றினீர்கள்.

ஆனால், அந்த கருவியை 70 ஆயிரம் கிலோமீட்டர் கொண்ட ரயில்வே பாதையில் வெறும் 1500 கிலோமீட்டருக்கு மட்டும் தான் பொருத்தி உள்ளீர்கள். அது வெறும் 2 சதவீதம் கூட இல்லை என மம்தா குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதற்கு போதுமான பதில் அமைச்சரிடம் இல்லை. இந்த கோர விபத்திற்கு யார் காரணம்? நிர்வாகமா? தனி மனிதரா? தமிழ்நாட்டில் சிறிய விஷயம் நடந்தாலும் உடனே முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்லும் பாஜக இதுவரை ஏன் வாயை திறக்கவில்லை. வந்தே பாரத் என்ற ரயிலை தொடங்கும்போது நேரடியாக அங்கு சென்று விளம்பரம் தேடும் பிரதமர் மோடி இதில் ஏன் கவனம் செலுத்தவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in