“மதுரை - திருமோகூரில் சாதி வெறித் தாக்குதலில் ஈடுபட்டோரை கைது செய்க” - திருமாவளவன்

“மதுரை - திருமோகூரில் சாதி வெறித் தாக்குதலில் ஈடுபட்டோரை கைது செய்க” - திருமாவளவன்
Updated on
1 min read

மதுரை: மதுரை - திருமோகூரில் நடந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளன், “சாதிய வன்கொடுமைகளில் ஈடுபட்ட அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும்” என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் திருவிழாவின்போது நேற்று இரவு ஆடல் - பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரு தரப்பினரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்குவாதமானது மோதலாக மாறியுள்ளது. தொடர்ந்து ஒரு தரப்பினரின் பகுதிகளில் புகுந்த இன்னொரு தரப்பினர், அங்கிருந்த 35 இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். மேலும், கார் ஒன்றையும சேதப்படுத்தி அங்கிருந்த சிலரையும் தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சாதிய வன்கொடுமையில் ஈடுப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், “மதுரை அருகே திருமோகூரில் சாதி வெறியாட்டம். ஒவ்வொரு ஆண்டும் கோயில் திருவிழாவின்போது, குடிபோதையில் சாதிவெறிப் பித்தர்கள் இவ்வாறு ஆதி திராவிடர்களின் குடியிருப்பிற்குள்ளே நுழைந்து கொலை வெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சொத்துக்கள் சூறை. ஏராளமானோர் காயம். மணிமுத்து, பழநிக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் சிலர் மதுரை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சாதிஆதிக்க வெறியாட்டத்தை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. சாதிய வன்கொடுமைகளில் ஈடுபட்ட அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக வேண்டுகோள் விடுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in