

சென்னை: "ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்களில் 250 பேர் நாளை காலை சென்னை வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 120 பேரின் எண்களை தொடர்பு கொண்டு தகவல் சேரித்துள்ளோம்" என்று ரயில்வே எஸ்.பி பொன்ராம் தெரிவித்தார்.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே எஸ்.பி பொன்ராம் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் காவல்துறை சார்பில் ஒரு டிஎஸ்பி, ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் ஒரு டிஎஸ்பி, மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் 24 மணி நேரம் பணியாற்றி வருகின்றனர்.
இதுவரை 4 பேர் தங்களின் உறவினர்கள் தொடர்பான தகவலைக் கேட்டுள்ளனர். அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 200 காவல்துறையினர் மற்றும் 20 கமாண்டோக்கள் கொண்ட ஒரு படையினர் சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்களில் 250 பேர் நாளை காலை சென்னை வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 120 பேரின் எண்களை தொடர்பு கொண்டு தகவல் சேரித்துள்ளோம்.
விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் 800-க்கும் மேற்பட்டவர்கள் முன் பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த ரயில்களில் முன்பு பதிவு செய்யாத பெட்டிகள் தான் எப்போதும் அதிகமான பயணிகள் கூட்டம் இருக்கும். 5 முன்பதிவு செய்யாத பெட்டிகள் இருக்கலாம். இதில் அளவுக்கு அதிகமாக பயணிகள் பயணம் செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.