

சென்னை: ஒடிசா ரயில் விபத்து நடத்த இடத்திற்கு உறவினர்கள் செல்ல சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
ஒடிசாவில் நேற்று (ஜூன் 2) சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 230-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லவும், அங்கு இருப்பவர்கள் சென்னை வரவும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் சிறு காயம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள், காலை 8.45க்கு புவனேஷ்வர் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தவிர்த்து சென்னையில் இருந்து உறவினர்கள் செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் இன்று இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு புவனேஷ்வர் வரை இயக்கப்படுகிறது.