தாம்பரம் ரயில் நிலையத்தில் போதுமான ஊழியர்கள் இல்லாமல் மூடியே கிடக்கும் முன்பதிவு டிக்கெட் கவுன்ட்டர்கள்

தாம்பரம் ரயில் நிலையத்தில் போதுமான ஊழியர்கள் இல்லாமல் மூடியே கிடக்கும் முன்பதிவு டிக்கெட் கவுன்ட்டர்கள்
Updated on
3 min read

தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்ட்டர்களில் பாதிக்கும் மேல் ஊழியர்கள் இல்லாமல் மூடிக்கிடப்பதால் பயணிகள் தினமும் அவதிப்படுகிறார்கள். தேவையான ஊழியர்களை நியமித்து அனைத்து டிக்கெட் கவுன்ட்டர்களையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாக இருப்பது ரயில் பயணம்தான். பயண கட்டணம் குறைவு என்பது ஒரு காரணமாக இருந்தாலும் வசதியாக பயணம் செய்யலாம் என்பதுதான் முக்கிய காரணம். வயதானவர்கள் அனைவருமே ரயில் பயணத்தைத்தான் விரும்புகிறார்கள்.

கழிப்பறை, படுக்கை வசதி இருப்பதால் இரவு தூக்கம் கெடாமல் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்லலாம் என்பதுதான். என்னதான் ஆன்லைன் புக்கிங், ரயில்வே யுடிஎஸ் ஆப் வசதி வந்தாலும் இன்னும் பெரும்பாலானோர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு சென்று பயணச்சீட்டு எடுப்பதையும் முன்பதிவு செய்வதையும் விரும்புகிறார்கள்.

படிக்காதவர்கள், மூத்த குடிமக்கள் பெரும்பாலும் டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு சென்றுதான் பயணச்சீட்டு எடுக்கிறார்கள். முன்பதிவுக்கு புக்கிங் செய்கையில், ஏதேனும் சந்தேகம் எழுந்தால் உடனடியாக கவுன்ட்டரில் இருக்கும் ஊழியரிடம் கேட்டு சந்தேகத்தை போக்கிக்கொள்ளலாம்.

சென்னை நகரவாசிகள் சென்ட்ரல் மற்றும் எழும்பூர், மாம்பலம், பெரம்பூர், அண்ணாநகர், கிண்டி ரயில் நிலையங்களில் இயங்கும் டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு சென்று முன்பதிவு பயணச் சீட்டு எடுக்கிறார்கள். அதேபோல், தென்சென்னை பகுதியில் அதாவது புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள இடங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அருகேயுள்ள தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வரவேண்டியுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்களில் பயணம் செய்வதற்கான பயணச்சீட்டுகளை வழங்க முன்புற நுழைவுவாயில் தரைத்தள பகுதியிலும், கிழக்கு நுழைவுவாயில் பகுதியிலும் டிக்கெட் கவுன்ட்டர்கள் இயங்குகின்றன. ஜிஎஸ்டி சாலையில் இருந்து ரயில் நிலையத்துக்கு செல்லும் வகையில் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடை மேம்பாலத்திலும் புதிதாக டிக்கெட் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒரு தானியங்கி பயணச்சீட்டு இயந்திரமும் உள்ளது. முன்பதிவு பயணச்சீட்டு எடுக்க முன்புற நுழைவுவாயில் கட்டிடத்தின் முதல் தளத்தில் டிக்கெட் கவுன்ட்டர்கள் இயங்குகின்றன.

டிக்கெட் கவுன்ட்டர்கள் பல அமைக்கப்பட்டிருந்தாலும் எல்லா கவுன்ட்டர்களும் செயல்படுவதில்லை என்பதுதான் பொதுமக்களின் முதன்மையான குற்றச்சாட்டு. மொத்தம் 8 கவுன்ட்டர்களில் வெறும் 3 கவுன்ட்டர்கள் மட்டுமே இயங்குகின்றன. மற்ற அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. அதேபோல், கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் புறநகர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதற்கு 3 கவுன்ட்டர்கள் இருந்தாலும் ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இவை தவிர அங்கு டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒன்றும் இயங்குகிறது.

3 கவுன்ட்டர்கள் மட்டுமே.. ரயில்நிலைய முன்புற நுழைவுவாயில் தரைதளத்தில் புறநகர் ரயில் டிக்கெட் மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்குவதற்கென மொத்தம் 6 கவுன்ட்டர்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் 3 மட்டுமே இயங்குகின்றன. மற்றவை பணியாளர் இன்றி மூடிக்கிடக்கின்றன.

இதன் காரணமாக 3 கவுன்ட்டர்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்து நின்றே அவர்களால் பயணச்சீட்டை பெற முடிகிறது. புறநகர் ரயில்களில் பயணம் செய்ய சீசன் டிக்கெட் வாங்க வரும் பயணிகளும், ஏற்கெனவே வைத்திருக்கும் சீசன் டிக்கெட்டை புதுப்பிக்க வருவோரும் ஒருசில நேரங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

அதுவும் காலை நேரம் என்றால் சொல்லவே வேண்டாம். நீண்ட வரிசை ஒருபுறம் அலுவலகத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல வேண்டும் என்ற பதைபதைப்பு இன்னொரு புறம் என பயணிகளின் பாடு சொல்லி மாளாது. புதிதாக அமைக்கப்பட்டு ஜிஎஸ்டி சாலை நடை மேம்பால தளத்தில் புறநகர் ரயில்களுக்கான பயணச்சீட்டு வழங்க 2 கவுன்ட்டர்கள் உள்ளன. ஆனால், ஒன்று மட்டும்தான் இயங்குகிறது. மற்றொன்று ஊழியர் இல்லாமல் மூடிக்கிடக்கிறது. இதனால், அந்த ஒரு கவுன்ட்டரில் எப்போது பார்த்தாலும் நீண்ட வரிசைகாணப்படுகிறது.

இதனால் ஏற்படும் நேர விரயத்தால் சில பயணிகள் கவுன்ட்டர் ஊழியரிடம் தங்கள் கோபத்தை கொட்டிவிடுகிறார்கள். திருப்போரூரைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத பெரியவர் ஒருவர் கூறியது: நான் அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்கிறேன். முன்பதிவு சீட்டு எடுக்க தாம்பரம் ரயில் நிலையத்துக்குத்தான் வருவேன். அங்கு பயணிகளுக்கு உதவுவதற்காக ரயில்களின் விவரங்கள் அடங்கிய சார்ட்டு கிடையாது.

பெயருக்குத்தான் 8 கவுன்ட்டர்கள் உள்ளன. ஆனால், 3 கவுன்ட்டர்கள் மட்டுமே செயல்படுகின்றன. மூத்த குடிமக்களுக்காக இங்கு இயங்கிய தனி கவுன்ட்டர் தற்போது தரைத்தளத்துக்கு மாற்றப்பட்டது. மூத்த குடிமக்களுக்கு தற்போது பயணக்கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டிருப்பதால் அந்த சிறப்பு கவுன்ட்டரும் செயல்படுவதில்லை.

குறைந்த கவுன்ட்டர்களே செயல்படுவதால் காத்து நின்றுதான் முன்பதிவு சீட்டு எடுக்க முடிகிறது. கூட்டத்தை ஒழுங்குபடுத்த யாரும் கிடையாது. ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதுகுறித்து கேட்கவும் ஊழியர்கள் அங்கில்லை. பெரும்பாலான மூத்த குடிமக்களால் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியாது.

அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு டிக்கெட் கவுன்ட்டர்கள்தான். இதை உணர்ந்து ரயில்வே அதிகாரிகள் செயல்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு போதிய ஊழியர்களை நியமித்து அனைத்து டிக்கெட் கவுன்ட்டர்களும் செயல்பட ரயில்வே உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.

பயணிகள் என்ன சொல்றாங்க?

ஆர்.குமரேசன், அச்சரப்பாக்கம்: தாம்பரம் ரயில்நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் பெரும்பாலானவற்றில் ஊழியர்கள் இருப்பதில்லை. இதனால், இயங்கும் ஒருசில கவுன்ட்டர்களில் நீண்ட வரிசையில் காத்து நின்றுதான் டிக்கெட் எடுக்க வேண்டியுள்ளது. ரயில்வே செயலி வசதி இருந்தாலும் எல்லா பயணிகளும் அதை பயன்படுத்தி டிக்கெட்டுகள் எடுப்பதில்லை. வயதானவர்கள், படிக்காதவர்கள் இன்னும் டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு வந்துதான் டிக்கெட் எடுக்கிறார்கள்.

பீக் அவர்களில் பயணச் சீட்டு வாங்குவதற்கும் சீசன் டிக்கெட்டை புதுப்பிப்பதற்கும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. எனவே, ரயில்வே நிர்வாகம் தேவையான ஊழியர்களை நியமித்து அனைத்து டிக்கெட் கவுன்ட்டர்களும் இயங்கும் சூழலை உருவாக்க வேண்டும். அப்போதுதான் பயணிகள் விரைவாக டிக்கெட் எடுக்க முடியும்.

ரவீந்திரன் ஆல்பிரட், ஊரப்பாக்கம்: ஆன்லைனில் புக்கிங் செய்யலாம் என்றாலும் பெரும்பாலும் நான் டிக்கெட் கவுன்ட்டருக்கு நேரில் சென்றுதான் புக்கிங் செய்வேன். அந்த வகையில் தாம்பரம் ரயில்நிலையத்துக்குச் சென்று புக்கிங் செய்யும்போது மணிக்கணக்கில் காத்துகிடக்க வேண்டியுள்ளது. டிக்கெட் கவுன்ட்டர்கள் பல இருந்தாலும் 2 அல்லது 3 கவுன்ட்டர்கள்தான் இயங்குகின்றன.

கடந்த வாரம் புக்கிங் செய்யும்போது 2 மணி நேரம் காத்துநின்றுதான் டிக்கெட் முன்பதிவுசெய்தேன். அனைத்து கவுன்ட்டர்களும் இயங்கினால் இதுபோன்று காலவிரயம் ஏற்படாது. விரைவாக முன்பதிவுசெய்துவிடலாம். எனவே, ரயில்வே அதிகாரிகள் அனைத்து டிக்கெட் கவுன்ட்டர்களும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in