

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.45 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று பொதுப்பணித் துறைச் செயலர் பி.சந்திரமோகன் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத் துறைசார்பில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்,கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து பொதுப்பணித் துறைச் செயலர் பி.சந்திரமோகன் பேசியதாவது:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலை மேம்படுத்த, பெருந்திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் ரூ.45கோடி மதிப்பில், கோயில் சாலைகள் மேம்பாடு, அடிப்படை வசதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள், கடைகள், காத்திருப்போர் அறை, மரக் கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துதரஅலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மருதமலை கோயிலை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் துணைஆணையர் ஹர்சினி, கோட்டாட்சியர் கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.