Published : 03 Jun 2023 06:17 AM
Last Updated : 03 Jun 2023 06:17 AM
தஞ்சாவூர்: அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் கட்டணம் எதுவும் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது: வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் முன்னர், பள்ளி மற்றும் வகுப்பறைகளை சுத்தப்படுத்துதல், வளாகத்தில் புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என கூறமுடியாது. அனைத்துப் பள்ளிகளிலும் கூடுதல் பொறுப்புடன் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் மேமாதத்தில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகே எத்தனை மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்ற முழு விவரம் தெரியவரும்.
வட மாவட்டங்களில் தேர்ச்சிசதவீதத்தை அதிகரிக்க, அந்தந்தமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சில இடங்களில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றமும் நடந்துள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கைகள், நிதி நிலைமைக்கேற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும்.
அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் வகுப்புக்கு ஏற்கெனவே ரூ.200 வசூல் செய்யப்பட்டது. தற்போது அந்தத் தொகையும் வசூல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் எதற்காகவும் கட்டணம் வசூல் செய்யக் கூடாது. அதையும் மீறி வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT