

கரூர்: கரூரில் கடந்த 8 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை நேற்று நிறைவு பெற்றது. 8-வது நாளான நேற்று வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், பொறியாளர் அலுவலகத்தில் கணினி ஆகியவற்றை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோரின் வீடுகள், நிறுவனங்கள், அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த மே 26-ம் தேதி முதல் தொடர்ந்து சோதனை நடத்தி வந்தனர்.
எட்டாம் நாளான நேற்று கரூர்ஜவஹர் பஜார் லாரி மேடு அருகேயுள்ள வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. இதில் கிடைத்த ஆவணங்களை, இரு அட்டைப் பெட்டிகளில் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். மேலும், செங்குந்தபுரத்தில் உள்ள பொறியாளர் பாஸ்கர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்த கணினி உள்ளிட்ட பொருட்களையும் வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்தசிஆர்பிஎஃப் வீரர்கள் நேற்று புறப்பட்டுச் சென்றனர்.