Published : 09 Oct 2017 08:33 am

Updated : 09 Oct 2017 08:33 am

 

Published : 09 Oct 2017 08:33 AM
Last Updated : 09 Oct 2017 08:33 AM

அம்மப்பள்ளி அணையிலிருந்து உபரி நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்று பாலங்களை திருவள்ளூர் ஆட்சியர் நேரில் ஆய்வு

கனமழை காரணமாக ஆந்திர மாநிலம், அம்மப்பள்ளி அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேற்று ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநிலம்- சித்தூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் கிராமம் அருகே அம்மப்பள்ளி அணை உள்ளது. அங்கு பெய்துவரும் கனமழையால் அந்த அணை நிரம்பியதால் கடந்த 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவில் அணையிலிருந்து, வினாடிக்கு 300 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது.


கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்ட இந்த நீர், திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளான வெளியகரம், பள்ளிப்பட்டு, நெடியம் மற்றும் ஆந்திர மாநிலம் - நகரி, திருவள்ளூர் மாவட்டம்- நல்லாட்டூர், என்.என்.கண்டிகை, நெமிலி, அருங்குளம், லட்சுமாபுரம், திருவாலங்காடு உட்பட பல்வேறு பகுதிகள் வழியாக பூண்டி ஏரியை சென்றடைகிறது.

ஆகவே, கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இச்சூழலில், உபரி நீர் செல்லும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்களை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி ஆய்வு செய்தார். அப்போது, பள்ளிப்பட்டில் உள்ள சோளிங்கர் சாலை பாலம், புண்ணியம் பாலம் ஆகிய உயர் மட்ட பாலங்கள், நெடியம் மற்றும் சாமந்தவாடா தரைப்பாலங்கள் வழியாக உபரி நீர் செல்வதையும், அந்நீரின் அளவையும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆட்சியர் சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

அம்மப்பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர், நெடியம் மற்றும் சாமந்த வாடா தரைப்பாலங்களின் மேல் ஒரு அடி உயரத்துக்கு செல்கிறது. ஆகவே, வருவாய் துறை, பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பாலங்களில், விபத்துகளை தவிர்க்க, பகல் நேரங்களில் வாகனங்களை மெதுவாகவும் கவனமாகவும் இயக்க வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் தரைப்பாலத்தின் இரு பக்கங்களிலும் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தவிர்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது கொசஸ்தலையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் வேதபுரி, உதவி பொறியாளர் வெங்கடேஸ்வரலு, திருத்தணி கோட்டாட்சியர் ஜெயராமன், பள்ளிப்பட்டு வட்டாட்சியர் தமிழ்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x