

சேலம்: சென்னை பெருநகர மக்களின் போக்குவரத்துத் தேவையில் சுமார் 50 சதவீதத்தை, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் முனையங்கள் நிறைவேற்றிக் கொடுக்கின்றன. சேலம் மாநகருக்கும் அதுபோன்ற ரயில் போக்குவரத்து வசதி தேவையென்று, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
சேலம் மாநகரம் ஜவுளி மற்றும் வெள்ளிக் கொலுசு தொழில், வணிக நிறுவனங்கள், மருத்துவ கட்டமைப்பு, தொழிற்சாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், மாவட்ட தலைநகரம் என தொழிலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய மாநகரமாக உள்ளது. இதனால், சேலத்துக்கு தினமும் லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
ஆனால், அவ்வளவு மக்கள் தொகையும் வந்து செல்வதற்கான சாலை கட்டமைப்பு சேலத்தில் இல்லை. எனவே, சாலை போக்குவரத்துக்கு இணையாக, ரயில் போக்குவரத்து கட்டமைப்பையும் உருவாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சேலத்தில் ஜங்ஷன் ரயில் நிலையம், செவ்வாய்ப்பேட்டை, டவுன் என 3 ரயில் நிலையங்கள் உள்ளன. சேலம்- விருத்தாசலம் ரயில் பாதையில் உள்ள இந்த 3 ரயில் நிலையங்களுடன், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் கைவிடப்பட்ட அம்மாப்பேட்டை கிழக்கு ரயில் நிலையம், அதையடுத்து, சில கிமீ தூரத்தில் உள்ள அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் ஆகியவை சேலத்தோடு இணைந்தவையாக இருக்கின்றன.
இந்த 5 ரயில் நிலையங்களையும் ஒருங்கிணைத்து, சென்னையில், எழும்பூர், சென்ட்ரல் என ரயில் முனையங்கள் மூலம் புறநகர் ரயில்கள் இயக்கப்படுவது போல, சேலம் ஜங்ஷன்-அயோத்தியாப்பட்டணம் இடையே ரயில்களை இயக்க வேண்டும். இந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை மிக அதிகமாகவே உள்ளது.
குறிப்பாக, அயோத்தியாப்பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பல ஆயிரம் பேர் தினமும் சேலம் வந்து செல்கின்றனர். இதேபோல, சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் ஆகியவற்றில் இருந்து வருபவர்கள், அயோத்தியாப்பட்டணம் வழியாகவே சேலம் வர வேண்டியுள்ளது.
எனவே, அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து ரயில்களை இயக்கும்போது, மக்கள் அங்கிருந்து எளிதாக சேலம் மாநகருக்கு வந்து செல்வதுடன், அண்டை மாவட்ட நகரங்களுக்கு பணிக்கு செல்வோர், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வழியாக செல்லும் நீண்ட தூர ரயில்களில் பயணிப்பவர்கள் என பல தரப்பினருக்கும் அது உதவியாக இருக்கும்.
சேலத்தில் ரயில் போக்குவரத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பு குறித்து தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் ஜி.ஹரிஹரன் பாபு கூறியது:
சேலம் ஜங்ஷனில் இருந்து இயக்கப்பட்டு வரும் சேலம்-யெஷ்வந்த்பூர் (பெங்களூரு) பயணிகள் ரயில், சேலம்-கரூர்-திருச்சி பயணிகள் ரயில், சேலம்-கோவை பயணிகள் ரயில், சேலம்-காட்பாடி பயணிகள் ரயில் ஆகியவற்றை சேலம் டவுன் ரயில் நிலையத்தில் இருந்து இயக்க வலியுறுத்தி வருகிறோம்.
இவற்றை, அயோத்தியாப்பட்டணம் வரை நீட்டித்து இயக்க முடியும். இதன் மூலம் அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி, சேலம் நகர மக்கள் மட்டுமல்லாது, அண்டை மாவட்ட மக்களும் நேரடியாக பெங்களூரு, கோவை, திருச்சி, காட்பாடி உள்ளிட்ட நகரங்களுக்கு ரயிலில் செல்ல முடியும்.
இந்த ரயில்கள் அடுத்தடுத்து இயக்கப்படும் போது, அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து, அம்மாப்பேட்டை, டவுன், செவ்வாய்ப்பேட்டை, ஜங்ஷன் ஆகியவற்றுக்கு மக்கள் தாமதமின்றி வந்து செல்வதற்கான புறநகர் ரயில் போக்குவரத்து வசதியும் கிடைக்கும். சேலத்தில் ரயில்வே கோட்ட தலைமை அலுவலகம் இருக்கும் நிலையில், இதை செயல்படுத்துவது சாத்தியமே, என்றார்.
சேலம் புறநகர் ரயில்போக்குவரத்துக்கான வசதியை ஏற்படுத்த, அயோத்தியாப்பட்டணம், அம்மாப்பேட்டையில் சேலம் கிழக்கு ரயில் நிலையம் இருந்த இடம் ஆகியவை உள்ளதால், திட்டத்தை செயல்படுத்துவதில் இடையூறோ, அதிக நிதி தேவை என்ற பிரச்சினையோ இல்லை.
அயோத்தியாப்பட்டணம், சேலம் கிழக்கு ஆகியவற்றை ரயில் நிலையங்களாக மாற்றியமைத்தாலே போதுமானது என்பது திட்டத்தை வெற்றி பெற வைக்கும் என்பதை உணர முடிகிறது. இதில், சேலத்தின் துணை நகரமாக அயோத்தியாப்பட்டணம் வளர்ந்து வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சேலம் மாவட்டத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள், தொழில் கூட்டமைப்பினர், ரயில்வே அதிகாரிகள் உரிய முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.