Published : 03 Jun 2023 05:40 AM
Last Updated : 03 Jun 2023 05:40 AM
சென்னை: பயணச்சீட்டு பரிசோதகரால் பேருந்து பயணி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை அடையாறில் பணிபுரியும் தினேஷ் என்பவர், கடந்த 30-ம் தேதி கிண்டியில் மாநகர பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தின் மற்றொரு முனையில் நடத்துநர் இருந்ததாலும், கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தாலும் அவரால் பயணச்சீட்டு எடுக்க முடியவில்லை. இதனால் நடத்துநர் தங்கள் பக்கம் வருவார் என தினேஷ் காத்திருந்தார்.
இந்நிலையில், சின்னமலை சந்திப்பில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஏறியுள்ளனர். அவர்களிடம் நிலைமையை எடுத்துக் கூறியும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. பயணச்சீட்டு எடுக்கவில்லை எனக் கூறி தினேஷின் உடமைகளை வெளியில் எறிந்தனர்.
மேலும் தினேஷின் சட்டையைப் பிடித்து இழுத்து வந்தனர். இதுதொடர்பான வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. மேலும் நாளிதழ்களிலும் செய்தியாக வெளியானது.
அதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன், தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT