மேகேதாட்டு அணை விவகாரம் | தமிழகத்தின் உரிமை பறிபோக அனுமதிக்கக் கூடாது: வைகோ, அன்புமணி வலியுறுத்தல்

மேகேதாட்டு அணை விவகாரம் | தமிழகத்தின் உரிமை பறிபோக அனுமதிக்கக் கூடாது: வைகோ, அன்புமணி வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மேகேதாட்டுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பறிபோக அனுமதிக்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: காங்கிரஸ் அரசு பொறுப்புக்கு வந்தவுடன், மேகேதாட்டு அணை கட்டும் பணியைத் தொடங்கப் போவதாகத் கூறியிருக்கிறது. நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், மேகேதாட்டு அணை கட்டும் பணியைத் தொடங்குவோம். எந்தநிலையிலும் பின்வாங்க மாட்டோம் என்று கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

உச்ச நீதிமன்றம் 2018-ல்அளித்த தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு வரவேண்டிய 177.25 டிஎம்சி நீர், கானல் நீராகவே போய்விடும். காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், தமிழகத்துக்கு சொட்டுநீர் கூட காவிரியில் வராது. தமிழகத்தின் மரபு உரிமையை கர்நாடக மாநிலம் பறித்துக்கொள்வதை ஏற்க முடியாது. எனவே, மத்திய அரசு இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது.

பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தின் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. வீணாகக் கடலில் கலக்கும் காவிரி நீரைத் தடுப்பதற்காக அணை கட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழகமும், கர்நாடகமும் நீதிமன்றத்துக்கு செல்வதை நிறுத்த வேண்டும். மேகேதாட்டு அணை கட்ட ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியிருப்பதை ஏற்க முடியாது.

பகையாடிக் கெடுக்க முடியாவிட்டால், உறவாடிக் கெடு என்ற பழமொழியின்படி, கர்நாடக துணை முதல்வர் செயல்படுகிறார். இந்த வஞ்சக வலையில் தமிழகம் விழுந்து விடக்கூடாது. மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும்.

கர்நாடக துணை முதல்வரின் நஞ்சு தடவிய இனிப்பு வார்த்தைகளில் மயங்கி, காவிரி ஆற்றில் தமிழகத்தின் உரிமையை இழந்துவிடக் கூடாது. எனவே, மேகேதாட்டு அணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்து நடத்தி, மேகேதாட்டுவில் அணை கட்டமுயற்சிக்கும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும். இவ்வாறு வைகோ, அன்புமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in