Published : 03 Jun 2023 07:00 AM
Last Updated : 03 Jun 2023 07:00 AM

திருப்பத்தூர் நகராட்சியில் அனுமதியின்றி இயங்கும் மாட்டிறைச்சி கடைகளால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பத்தூர் நகராட்சி 27-வது வார்டில் குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் மாட்டிறைச்சி கடை.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சியில் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அனுமதியின்றி இயங்கி வரும் மாட்டிறைச்சி கடைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அங்குள்ள மக்கள் பல்வேறு நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பத்தூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதில், 23,24 மற்றும் 27-வது வார்டுகளில் அனுமதியின்றி மாட்டிறைச்சி கடைகள் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் இயங்கி வருகிறது. இந்த கடைகளால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து 27-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறியதாவது, ‘‘எங்கள் வார்டில் சுமார் 300 வீடுகள் உள்ளன. இங்குள்ள முக்கிய தெருக்களில் மாட்டிறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன. 27-வது வார்டில் மட்டும் ஏறத்தாழ 7 கடைகள் உள்ளன.

அதிகாலையில் இந்த கடைகள் முன்பாகவே மாடுகள் வெட்டப்படுகின்றன. அதிலிருந்து வெளியேறும் கழிவுகள் தெருக்கால்வாயில் கலக்கப்படுகிறது. மாட்டின் ரத்தம் சாலையில் ஊற்றப்படுவதால் அவ் வழியாக சென்று வர முடியவில்லை. இதேபோல, 24 மற்றும் 23-வது வார்டுகளில் மாட்டிறைச்சி கடைகள் உள்ளன. அங்கும் இதே நிலை தான். இந்த கடைகள் முறையான அனுமதியை பெறவில்லை. நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டபோது மொத்த கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

ஆனால், ஒரு மாதத்துக்கு பிறகு அனைத்து கடைகளும் பழையபடி திறக்கப்பட்டு மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு நகராட்சிகளில் மாடு, ஆடு, கோழி ஆகியவைகளை வெட்ட தனியாக இடம் அமைக்கபப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள்
டிராக்டரில் கொண்டு செல்லப்பட்டு குடியிருப்பு பகுதிக்கு
அருகாமையில் கொட்டப்படுகிறது.

திருப்பத்தூர் நகராட்சியில் அதற்கான இடம் இல்லாததால் குடியிருப்புப்பகுதிக்கு மத்தியில் மாட்டிறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளால் இப்பகுதியில் வசிக்கவே முடியவில்லை. ஒரு சிலர் வீடுகளையே விற்றுவிட்டனர். ஒரு சிலர் வீடுகளை காலி செய்து வேறு இடத்துக்கு சென்றுவிட்டனர்.

மற்ற வீட்டில் உள்ளவர்கள் நிலை பரிதாபமாக உள்ளது. மாட்டின் கழிவுகள் சாலையில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகள், பெண்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விற்பனைக்காக பல்வேறு இடங்களில் இருந்து உயிருடன் கொண்டு வரப்படும் மாடுகள் 27-வது வார்டில் உள்ள காலி இடத்தில் கட்டி வைக்கப்படுகிறது. இரவு நேரங்களில் அந்த மாடுகள் கத்தி, கூச்சலிடுகின்றன. இதனால், இரவில் நிம்மதியாக உறங்கக்கூட முடியவில்லை. இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு காணாவிட்டால் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டியநிலை வரும்’’ என்றனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘திருப்பத்தூர் அடுத்த வெங் களாபுரம் பகுதியில் ஆடுதொட்டி அமைக்க அனுமதி கேட்டும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.

அதற்கான நிதியும், அனுமதியும் கிடைத்த உடன், ஆடுதொட்டி அங்கு அமைக்கப்படும். மேலும், உரிமம் இல்லாமல் இயங்கி வரும் மாட்டிறைச்சி கடைகளை மூட எச்சரிக்கை நோட்டீஸ் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அனுப்பப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x