யுவராஜுக்கு ஆயுள் தண்டனை உறுதி முதல் ராகுல் கணிப்பு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 2, 2023

யுவராஜுக்கு ஆயுள் தண்டனை உறுதி முதல் ராகுல் கணிப்பு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 2, 2023
Updated on
3 min read

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜுக்கு ஆயுள் உறுதி: பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். பட்டியலினத்தை சேர்ந்தவர். வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் அருண் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. அதில், யுவராஜ் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளது. இந்த வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்தப் பிழையும் இல்லை. எனவே, யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில், பிரபு மற்றும் கிரிதர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், இந்த வழக்கில் 5 பேரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் சரியே என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

"தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கக் கூடிய சாதி ஆணவ படுகொலைகளுக்கு சட்டத்தின் முன் தண்டனை கிடைக்கும் என்பதற்கு நீதிமன்றம் ஒரு அற்புதமான தீர்ப்பை அளித்திருக்கிறது" என்று கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் மோகன் கூறியுள்ளார்.

“என் மகன் மீது அப்படி என்ன வெறி?” - கோகுல்ராஜின் தாய் சித்ரா: "ஒருபாவமும் செய்யாத எனது மகனை சித்ரவதைக்கு ஆளாக்கி, என் மகனின் தலையைத் துண்டித்துள்ளனர். என் மகன் அப்படி என்ன தப்பு செய்தான்? அப்படி என்ன அவன் மீது வெறி? அவன் என்ன தவறு செய்தான்? நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததற்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா கூறியுள்ளார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம்: சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் 25 ஏக்கரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கருணாநிதி நூற்றாண்டு இலச்சினையை அவர் வெளியிட்டார்.

ஆசிரியர்கள் நியமனம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு: கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என தீர்ப்பளித்துள்ளனர்.

நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற தமிழக அரசின் விதியை ரத்து செய்த நீதிபதிகள், பதவி உயர்வுக்கும் தகுதித் தேர்வு கட்டாயம் என தெளிவுபடுத்தியுள்ளனர்.

முதல்வரின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப் பயணம் தோல்வி: இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப் பயணம் தோல்வி என்று குறிப்பிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "பகல் கொள்ளையையும், தவறுகளையும் மறைக்க முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குப் பயணம் என்று தமிழக மக்களின் காதில் பூ சுற்றும் வேலையை முதல்வர் ஸ்டாலின் இத்துடன் நிறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

“ராகுல் காந்திக்கு வேலை இல்லை...” - அண்ணாமலை விமர்சனம்: ராகுல் காந்திக்கு வேலை இல்லை என்பதால் இந்தியாவில் ஒட்டுமொத்த இளைஞர்களும் வேலைவாய்ப்பின்மையால் அவதிப்படுகிறார்கள் என்று அர்த்தமில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

‘அகண்ட பாரத’ சுவரோவியத்தால் சர்ச்சை: பிரதமர் நரேந்திர மோடி மே 28-ம் திறந்துவைத்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சுவரோவியத்தால் நேபாளத்தில் சர்ச்சை வெடித்துள்ளது. அகண்ட பாரதம் ஓவியமாக தீட்டப்பட்டுள்ள அதில், நேபாளத்தின் லும்பினி இந்தியாவில் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. லும்பினி என்பது நேபாளத்தில் உள்ள புத்தர் பிறந்த இடம். அதனை இந்தியாவில் இருப்பதுபோல் அந்த சுவரோவியம் காட்டுவதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதனிடையே, ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத் தன்மைக்கும் தலைமையகமாக இருக்கவேண்டிய புதிய நாடாளுமன்றம் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

“அடுத்தடுத்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வீழ்த்தப்படும்”: அடுத்து வரும் மூன்று, நான்கு சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் பாஜக அழிக்கப்படும் என்றும், பெரும்பான்மை மக்களின் ஆதரவில்லாத ஆளுங்கட்சியை வீழ்த்துவதற்கான அடிப்படை விஷயங்கள் அனைத்தும் காங்கிரஸிடம் இருக்கிறது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 2 எஃப்ஐஆர், 10 புகார்கள்: மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார்களின் பேரில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 10 புகார்களுடன் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, பாலியல் குற்றச்சாட்டுகளை விவரிக்கும் ஆங்கில செய்தித்தாளின் அறிக்கையைப் பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "நரேந்திர மோடி ஜி இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகளைப் படித்துவிட்டு, குற்றம்சாட்டப்பட்டவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நாட்டுக்குச் சொல்லுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், "மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம். ஆனால், சட்டபூர்வமான நடைமுறைகளைப் பின்பற்றியே அதனைப் பெறவேண்டும்" என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆக.15 முதல் ரூ.2,000 திட்டம் அமல்: கர்நாடக வாக்காளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அதேபோல், மற்ற முக்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவது குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in