

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள கங்காபுர்வாலா, கடந்த 28-ம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்துக்கு நேற்று வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி கங்காபுர்வாலாவை, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.
பின்னர், `வணக்கம்' என்று தமிழில் கூறி உரையைத் தொடங்கிய தலைமை நீதிபதி, ‘‘பல சான்றோர்களையும், கலை, கலாச்சாரச் செறிவையும் கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவம்மிக்கது. சென்னை உயர் நீதிமன்றம், பல உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், சட்ட வல்லுநர்களையும் தந்துள்ளது.
இன்றைய இளைய வழக்கறிஞர்களும், அந்தப் பெருமையை தொடர்ந்து கொண்டுசெல்வர். தமிழகத்தின் மரபு, கலாச்சாரங்களைப் பின்பற்றி, உங்களில் ஒருவனாக நான் பணியாற்றுவேன்’’ என்றார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.