

உதகை: பணி ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரை தனது காரில் வீடு வரை வழியனுப்பிவைத்த நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகரின் செயல், போலீஸாரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக ரவி என்பவர் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்ற அவருக்கு எஸ்.பி. அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அவருக்கு காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர், சந்தன மாலை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார்.
விழா முடிந்து வீட்டுக்கு செல்ல தயாராக இருந்த ரவிக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர், தன்னுடய காரில் ரவியை அமர செய்து சல்யூட் அடித்தார்.
பின்னர் அவரை வீட்டில் இறக்கிவிடுமாறு ஓட்டுநருக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவத் தால் உதவி ஆய்வாளர் ரவி மற்றும் போலீஸார் நெகிழ்ச்சி அடைந்தனர். ஏற்கெனவே, கோடை சீசன் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸாருக்கு எஸ்.பி. கறி விருந்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.