Published : 02 Jun 2023 06:19 AM
Last Updated : 02 Jun 2023 06:19 AM
கோவை: கோவை விமான நிலையத்தில் உள்ள ஒருங்கிணைந்த சரக்கக வளாகத்தில் ஐந்து மாதங்களுக்கு பின் இன்று முதல் உள்நாட்டு சரக்குகளை கையாளும் பணி தொடங்க உள்ளது.
கோவை விமான நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கக வளாகம் அமைந்துள்ளது. மாதந்தோறும் சராசரியாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 700 டன் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 150 டன் வீதம் 850 டன் எடையிலான சரக்குகள் கையாளப்பட்டு வந்தன.
உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் பொருட்களை கண்காணித்து அனுப்பும் ‘ஸ்கேனர் ஆபரேட்டர்’ பணியை விமான நிலைய ஆணையகம் சார்பில் நியமிக்கப்படும் ஊழியர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற புதிய விதி கடந்த ஜனவரியில் அமல்படுத்தப்பட்டது.
கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு பிரிவில் ஸ்கேனர் ஆபரேட்டர்கள் இல்லாத காரணத்தால் ஜனவரி முதல் பொருட்களை கோவையில் இருந்து நாட்டின் பல பகுதிகளுக்கு கையாளப்படும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஐந்து மாதங்களுக்கு பின் மீண்டும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் இன்று (ஜூன் 2) முதல் சரக்குகள் கையாளும் பணி தொடங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “உள்நாட்டு பிரிவில் விமான நிறுவனங்களே ஸ்கேனர் ஆபரேட்டர்களை கொண்டு பணி மேற்கொண்டனர். விமான நிலைய ஆணையகத்தின் புதிய விதியால் ஜனவரி முதல் உள்நாட்டு பிரிவில் சரக்குகள் கோவையில் இருந்து அனுப்பப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.
விமான நிலைய ஆணையகம் சார்பில் மூன்று ஸ்கேனர் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சர்வதேச பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.
உள்நாட்டு பிரிவில் விரைவில் மேலும் பல ஸ்கேனர் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதுவரை இண்டிகோ விமான நிறுவனம் அவர்களின் விமானங்களில் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு அவர்களின் ஊழியர்களை நியமித்துக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கோவையில் தினமும் இயக்கப்படும் 27 விமானங்களில் இண்டிகோ விமான நிறுவனம் 20 விமானங்களை இயக்குகிறது. இதன் காரணமாகவே தற்காலிகமாக அந்நிறுவனத்துக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 700 டன் எடையிலான சரக்குகள் கையாளப் படுவது வழக்கம். கடந்த ஐந்து மாதங்களாக மற்ற நகரங்களில் இருந்து கோவைக்கு சரக்குகள் கொண்டு வர மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக மாதந்தோறும் 350 டன் எடை அளவுக்கு மட்டுமே சரக்குகள் உள்நாட்டு பிரிவில் கையாளப்பட்டன.
இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இனி வழக்கம் போல் மாதாந்திர சரக்குகள் கையாளும் சரக்குகள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும். கோவையில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகரங்களுக்கு ஜவுளிப்பொருட்கள், தங்க, வைர நகைகள் அதிகளவு விமானத்தில் கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT