

கோவை: ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதம் முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் (ஐடிஎப்) கன்வீனர் பிரபு தாமோதரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: வளர்ந்த நாடுகளில் பண வீக்கத்தால் ஏற்பட்ட வியாபார மந்த நிலை, இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியையும் கடந்த நிதி ஆண்டில் பாதித்தது. ரூபாய் மதிப்பில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகளை மார்ச் 31 வரையிலான கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி செய்து 8.7 சதவீத வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது.
இருப்பினும் டாலர் விலை ஏற்றம் மற்றும் ஆடைகளின் விலை ஏற்றத்தை கணக்கில் எடுத்துப் பார்க்கும்போது, ஆடைகளின் எண்ணிக்கை அடிப்படையில் 10 முதல் 15 சதவீதம் வரை குறைவாகவே ஏற்றுமதி செய்துள்ளோம்.
2021 -22ம் நிதியாண்டில், இந்தியா 94.6 கோடி டி ஷர்ட்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில், 2022 -23ம் நிதியாண்டில் 89 கோடி டி -ஷர்ட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடைசி காலாண்டில் மட்டும், ஏறத்தாழ 5.6 கோடி டி -ஷர்ட்டுகள் ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டை விட குறைவாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
எனவே, ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளின் உற்பத்தி திறன் குறைந்து காணப்படுகிறது. மூலப்பொருட்கள் விலை, சரக்குப் போக்குவரத்து கட்டணங்கள் உள்ளிட்டவை கடந்தாண்டு பாதகமாக இருந்த நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது.
கடந்த நிதியாண்டின் முதல் பகுதியில், தேவைக்கு அதிகமாக வெளிநாட்டு வணிகர்கள் ஆடைகளை இறக்குமதி செய்தனர். உதாரணமாக, ஒரு மாதத்திற்கு 7 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யும் அமெரிக்க சந்தையின் மதிப்பு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 10.4 பில்லியன் டாலர் என்ற அளவை தொட்டது. அதன் பின் பணவீக்கத்தால் நுகர்வு குறைந்தது. இதனால் 2023 பிப்ரவரி மாதத்தில், 5.9 பில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சந்தையிலும், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 2.23 பில்லியன் டாலர் அளவுக்கு நடந்த ஆயத்த ஆடை இறக்குமதி, பிப்ரவரி மாதத்தில் 1.3 பில்லியன் டாலர் அளவுக்கு குறைந்தது.
மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு இறக்குமதியை குறைத்ததன் விளைவாகவும், சில்லறை வணிகம் குறையாமல் ஓரளவு விற்பனை நிலையாக நடப்பதாலும், அவர்களிடமிருந்த ஆடைகள் கையிருப்பு குறைய தொடங்கியுள்ளது.
வால்மார்ட், டார்கெட் போன்ற பெரிய வணிக நிறுவனங்கள் தங்களுடைய சரக்கு கையிருப்பு குறைந்து விட்டதாகவும், அதையொட்டி புது ஆர்டர்கள் கொடுக்கத் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
நடப்பு நிதி ஆண்டு பணவீக்கத்தின் தாக்கம் குறைந்து கடந்தாண்டைப் போலவே நுகர்வு இருக்கும் என்றும், அப்படியே குறைந்தாலும் மூன்று முதல் ஐந்து சதவீதம் மட்டுமே குறைய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மார்ச் மாதம் முதல் அந்நாடுகளின் இறக்குமதி படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. மேலும் உயர்ந்து அக்டோபர் முதல் பழைய நிலையை அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
போட்டி கடுமையாக இருக்க வாய்ப்பு உள்ளதால் தொழில் நிறுவனங்கள் அதை எதிர்கொண்டு திறனை அதிகரித்தால் சாதிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.