கோவை | ரேஷன் கடைகளில் புகார் பெட்டிகளை முறையாக பராமரிக்க வலியுறுத்தல்

கோவை பீளமேட்டில் உள்ள ஒரு நியாய விலைக்கடையில், முறையாக பராமரிப்பில்லாமல் காணப்படும் புகார் பெட்டி.
கோவை பீளமேட்டில் உள்ள ஒரு நியாய விலைக்கடையில், முறையாக பராமரிப்பில்லாமல் காணப்படும் புகார் பெட்டி.
Updated on
1 min read

கோவை: ரேஷன் கடைகளில் நுகர்வோரின் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி மற்றும் தொலைபேசி எண்களை முறையாக பராமரிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர் நா.லோகு ‘இந்து தமிழ் திசை’யின் ‘உங்கள் குரல்’ தொலைபேசி பதிவில் கூறியிருப்பதாவது: பல லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ரேஷன் கடைகளின் மூலம் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தாலோ, முறையாக பொருட்கள் விநியோகம் செய்யப்படாமல் இருந்தாலோ துறை சார்ந்த அரசு உயரதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

அதற்கேற்ப, ரேஷன் கடைகளின் முன்பு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வழங்கல் அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர், சிறப்பு பறக்கும்படை வட்டாட்சியர் ஆகியோரின் தொடர்பு எண், கட்டணமில்லா தொலைபேசி எண் ஆகியவற்றை தகவல் பலகையில் எழுதி பொதுமக்கள் பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் பார்வையில் படும்படி புகார் பெட்டியும் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில், புகார் அளிக்க வேண்டிய அதிகாரிகளின் எண்கள், கட்டணமில்லா தொடர்பு எண் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையில் படும்படி வைப்பதில்லை. சில கடைகளில் இந்த பலகையே இருப்பதில்லை.

புகார் பெட்டிகளை பெயரளவுக்கு கடைகளின் ஏதோ ஓரத்தில் பொருத்துகின்றனர். அதை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை திறந்து புகார் கடிதம் ஏதேனும் வந்துள்ளதா என்றும் பார்ப்பதில்லை. இதை நிவர்த்தி செய்ய அரசு நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in