

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த வருவோர் மது குடித்து விட்டு பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவை விளை நிலங்களில் வீசி செல்வதால், விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை எழுந்துள்ளது.
சூளகிரி அருகே கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஒமதேப்பள்ளி கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் பரவலாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அதிலிருந்து இப்பகுதி விவசாயிகள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வருவோர் இறைச்சிகளைச் சாப்பிட்ட பின்னர் அதன் கழிவுகளை அப்பகுதியில் உள்ள விளை நிலங்களில் வீசி செல்கின்றனர். இதை உணவாக்க அதிக எண்ணிக்கையில் தெரு நாய்கள் அங்கு கூடுகின்றன.
மேலும், நாய்கள் கூட்டம் இரவு நேரத்தில் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளைக் கடித்து வருகின்றன. எனவே, இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஒமதேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சந்திரசேகரன், பசவராஜ் ஆகியோர் கூறியதாவது: டாஸ்மாக் கடை திறந்தது முதல் நாங்கள் பல்வேறு துயரங்களைச் சந்தித்து வருகிறோம். மதுகுடிப்பவர்கள் காலிப் பாட்டில்களை விளை நிலத்தில் உடைத்து வீசி செல்கின்றனர். நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ளும்போது, உடைந்த கண்ணாடி பாட்டில் துண்டுகள் கால்களில் குத்தி காயம் ஏற்படுகிறது.
இதேபோல தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், கவர்கள் அதிகளவில் நிலங்களில் வீசுவதால், மண் வளமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மேலும், மது அருந்துவோர் மீன், கோழி இறைச்சிகள் சாப்பிட்ட பின்னர் கழிவுகளைச் சாலைகள் மற்றும் விளைநிலங்களில் வீசுவதால், அதை சாப்பிட 50-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றனர். இவை இரவில், வீட்டின் அருகே கொட்டகையில் நுழைந்து கோழிகள், கன்றுக்குட்டிகளைக் கடித்து குதறிவிடுகின்றன.
இதனால், இதுவரை 100-க்கும் மேற்பட்ட கோழிகள், 10-க்கும் மேற்பட்ட கன்றுகள் உயிரிழந்துள்ளன. எனவே, விவசாயிகளின் நலன் கருதி, டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, அதிகரித்துள்ள தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.