

சென்னை: சென்னை கிண்டி சிட்கோ தலைமையகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: இந்த ஆண்டு சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் (UYEGP), வியாபாரம் சார்ந்ததொழில்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, அதற்கான திட்ட மதிப்பின் உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்துரூ.15 லட்சமாகவும், அரசு மானியம்ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரு.3.75லட்சமாகவும் உயர்த்தி அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.
இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய தொழில்முனைவோராக உருவாக வேண்டும். மேலும், உற்பத்தி மற்றும் சேவை துறைகளுக்கான தொழில்களுக்கு பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.
புதிதாக அறிவிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர விசைத் தறிகளின் உற்பத்தியை அதிகரிக்க, உயர் தொழில்நுட்பம் சார்ந்த நாடா இல்லாத நெய்தலுக்கான கருவிகளை பொருத்த 25 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை நெசவாளர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களின் விசைத்தறிக் கூடங்களை நவீனமாக்க வேண்டும்.
கிராமப்புற மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கும் தென்னை நார் பொருட்கள் தயாரிப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள குறு, சிறு நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தென்னைநார் உலர்த்தும் கருவிகள், இயந்திரங்கள், உபகரணங்களுக்கு முதலீட்டு மானிய திட்டத்தின்கீழ் 25 சதவீதம் மானியம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோரின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றும் இந்தஅரசுக்கு இளைஞர்கள், தொழில்முனைவோர்கள் துணைபுரிந்து,தமிழகத்தை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் துறை செயலர் வி.அருண்ராய், தொழில் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சோவ், இன்ட்கோசர்வ் முதன்மைச் செயல் அலுவலர் மோனிகா ராணா, தொழில் வணிக கூடுதல் இயக்குநர் ஏகாம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.