Published : 02 Jun 2023 06:11 AM
Last Updated : 02 Jun 2023 06:11 AM

சென்னையில் பல்வேறு இடங்களில் 3-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு: தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் தவிப்பு

சென்னை: பால் கொள்முதல் குறைவு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், சென்னையின் பல்வேறு இடங்களில் ஆவின் பால் விநியோகத்தில் 3-வது நாளாக நேற்றும் பாதிப்பு ஏற்பட்டது. குறித்த நேரத்தில் பால் கிடைக்காமல், காலதாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள், முகவர்கள் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது, சராசரியாக 30 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பால் பண்ணைகளில் பதப்படுத்தப்பட்டு, மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

சென்னையில் ஆவின் நிறுவனம்வாயிலாக 14.20 லட்சம் லிட்டர்பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் 5.50 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலும், அம்பத்தூர் பால் பண்ணையில் 4.20 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலும், மாதவரம் பால் பண்ணையில் 4.50 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதற்கிடையில், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய பால் பண்ணைகளில் இருந்து ஆவின் பால் விநியோகம் செய்வதில் கடந்த 2 நாட்களாக தாமதம் ஏற்பட்டது. இதனால், குறித்த நேரத்தில் பால் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் ஆவின் பால் விநியோகம் 3-வது நாளாக நேற்றும் தாமதமாகியது.

அம்பத்தூர், சோழிங்கநல்லூர், காக்களூர் ஆகிய பண்ணைகளில் இருந்து பால் விநியோகம் தாமதம் ஏற்பட்டதால், பொதுமக்கள், முகவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளில் இருந்து தினமும் 9.70 லட்சம் லிட்டர் பாலைஉற்பத்தி செய்து, வாகனங்கள்மூலமாக மாதாந்திர அட்டைதாரர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம். அதிகாலை நேரத்துக்குள்பால்முகவர்கள், அட்டைதாரர்களுக்கு பால் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இந்த பால் பண்ணைகளில் இருந்து வாகனங்கள் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன.

இதனால், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அடையாறு, வேளச்சேரி, பெருங்குடி, தாம்பரம், போரூர், பூந்தமல்லி, திருவேற்காடு, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. பால் கொள்முதல் குறைவு, ஒப்பந்தப் பணியாளர் பற்றாக்குறை ஆகியவையே இதற்கு முக்கியக் காரணமாகும்.

பணியாளர்கள் பற்றாக்குறை: இதுகுறித்து பெருங்குடி பகுதியைச் சேர்ந்த பால் முகவர் முருகன் கூறியதாவது: கடந்த 3 நாட்களாக ஆவின் பால் பாக்கெட் தாமதமாகவே கிடைக்கிறது. வழக்கமாக அதிகாலை 4 மணிக்குள் ஆவின் பால் கிடைத்துவிடும். நாங்கள் காலை 6.30 மணிக்குள் வீடு, கடைகளுக்கு விநியோகம் செய்து விடுவோம். ஆனால் கடந்த 3 நாட்களாக காலை 7.30 மணிக்குத்தான் பால் பாக்கெட் கிடைக்கிறது. இதை விநியோகம் செய்து முடிக்க காலை 9.30 மணியாகிவிடுகிறது.

தாமதம் காரணமாக பல இடங்களில் பால் பாக்கெட்களை திருப்பிக் கொடுத்துவிடுகின்றனர். பால் விநியோகம் தாமதம் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பெருங்குடியைச் சேர்ந்த சங்கரராமன் கூறும்போது, "வழக்கமாக காலை 5.30 மணிக்கு ஆவின் பால் வீட்டுக்கு வந்துவிடும். ஆனால், கடந்த சில நாட்களாக காலை 8.30 மணிக்குத்தான் வீட்டுக்கு பால் பாக்கெட் வருகிறது. இப்படியே ஆவின் பால் தாமதமாக வந்தால், தனியார் நிறுவனப் பாலைவாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்" என்றார்.

விரைவில் தீர்வு: இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "பழைய ஒப்பந்தப் பணியாளர்களின் பணிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், புதிய ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால், ஒப்பந்தப் பணியாளர்கள் பற்றாக் குறை நிலவுகிறது. ஒப்பந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். விரைவில் தீர்வு காணப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x