

சென்னை: சென்னை புதுப்பேட்டை பகுதியில் உள்ள கூவம் ஆற்றங்கரை குப்பை மேடாக மாறிவருவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த வாசகர் ஆனந்தகுமார் இந்து தமிழ் திசை நாளிதழின் உங்கள் குரல் தொலைபேசி சேவை எண்ணைத் தொடர்புகொண்டு கூறியதாவது:
சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் கூவம் ஆறு சீரமைப்பு திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக பல 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக கூவம் ஆற்றின் கரையோரங்களில் கொட்டப்பட்டிருந்த குப்பை கழிவுகள், கட்டுமானக் கழிவுகள் போன்றவற்றை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி, ஆற்றை தூய்மைப்படுத்தியது.
பின்னர் பல கோடி ரூபாய் செலவில், பொதுமக்கள், தொழில்நிறுவனங்கள் கூவம் ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் சுவர் எழுப்பி, கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு யாரும் குப்பை கொட்டுவதில்லை. ஆனால் சமீப காலமாக புதுப்பேட்டையை ஒட்டிசெல்லும் கூவம் ஆற்றின் இரு கரையோரப் பகுதிகளிலும் ஏராளமான குப்பை கொட்டப்பட்டுள்ளன. இதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மீண்டும் கூவம் ஆற்று மாசுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சிங்காரச் சென்னை 2.0 திட்டம்கொண்டு வந்து, மாநகரை ஒருபுறம்அழகுபடுத்தி வந்தாலும் இதுபோன்ற செயல்பாட்டால், மீண்டும்மாநகரம் பொலிவிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே கூவம் ஆற்றின் கரையோரங்களில் குப்பை கொட்டப்படுவதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வாசகர் கூறினார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "சென்னைஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளையுடன் இணைந்து, கூவம் ஆற்றின்கரையோரப் பகுதிகளில் உள்ளஏராளமான கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குசென்று, ஆற்றில் குப்பை கொட்டக்கூடாது என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஏற்கெனவே இப்பகுதியில் குப்பைகொட்டியவர்களுக்கு அபராதமும் விதித்திருக்கிறோம். வரும் நாட்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, ஆற்றில் குப்பை கொட்டுவது தடுக்கப்படும்" என்றனர்.